Actor Suriya’s Agaram Foundation (Photo Credit : Youtube)

ஆகஸ்ட் 08, சென்னை (Chennai News): பொருளாதாரத்தில் பின்தங்கி ஏழ்மையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு கல்வி என்ற அறிவாற்றலை வழங்கும் பொருட்டு அகரம் அறக்கட்டளை கல்வி உதவித்தொகை வழங்குகிறது. அகரம் அறக்கட்டளையில் இணைந்து படிப்பது எப்படி?, நிதியுதவி தொகை பெறுவது எப்படி? என்பது குறித்து இப்பதிவில் விரிவாக பார்க்கலாம். IBPS Clerk Recruitment: வங்கிகளில் கிளர்க் வேலைவாய்ப்பு.. 10,277 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?.!

அகரம் அறக்கட்டளை :

கடந்த 2006 செப்டம்பர் முதல் அகரம் அறக்கட்டளையின் தலைமை அலுவலகத்தை நடிகர் சூர்யா சென்னையில் உள்ள தி.நகர் பகுதியில் தொடங்கி வைத்து செயல்படுத்தி வருகிறார். அறக்கட்டளையின் முக்கிய நோக்கம் கிராமப்புற பகுதியில் பின்தங்கிய நிலையில் இருக்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான படிப்பை கொடுத்து முன்னேற்றுவது ஆகும். அவர்கள் படித்து நல்ல வேலைக்கு செல்வதால் அவர்களின் குடும்ப பொருளாதாரம் மேம்படும். இதனால் ஒட்டுமொத்த தமிழக அளவில் சமூக மேம்பாடு ஏற்படும்.

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை :

அகரம் அறக்கட்டளை பல்லாயிரக்கணக்கான மாணவர்களை கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறது. மருத்துவம், பொறியியல், சட்டம் உட்பட எந்த படிப்பு அவர்களுக்கு விருப்பமோ அதற்கான தேவையை அகரம் அறக்கட்டளை பூர்த்தி செய்கிறது. அகரம் அறக்கட்டளையில் சேர்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். இதனை பூர்த்தி செய்து அகரம் அறக்கட்டளைக்கு அனுப்ப வேண்டும். அந்த விண்ணப்பத்தை நிர்வாக குழு ஆய்வு செய்து மாணவர் ஊக்கத்தொகை பெற தகுதி உடையவரா? என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்ப விண்ணப்பத்தை செயல்படுத்தும்.

விதை ஊக்கத்தொகை :

இந்த ஊக்கத்தொகை 'விதை ஊக்கத்தொகை' என்ற பெயரில் வழங்கப்படுகிறது. ஊரகப் பகுதிகளில் அரசு பள்ளியில் மட்டும் படித்த மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர, அவர்களை பட்டதாரி இளைஞர்களாக உருவாக்க மாணவர்களின் கல்வி கட்டணம், விடுதி கட்டணம், உணவு கட்டணம் ஆகியவற்றை அகரம் அறக்கட்டளை செலுத்தும். கலை, அறிவியல், டிப்ளமோ போன்ற படிப்புகளுக்கு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் கட்டணத்தை அகரம் அறக்கட்டளை ஏற்றுக் கொள்கிறது.

கல்விக்கு உதவும் அகரம் அறக்கட்டளை :

அதேபோல மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ரூ.4.5 லட்சம் கல்வித் தொகையை அறக்கட்டளை ஏற்றுக்கொள்கிறது. இத்துடன் விடுதி கட்டணமாக மாதம் ரூ.3,500ம் வழங்கப்படுகிறது. தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று குடும்பச்சூழலால் படிக்க இயலாத மாணவர்களுக்கு உரிய பொருளாதார சூழ்நிலையை உருவாக்கி, அவர்களின் படிப்பு முன்னேற்றத்திற்காக விதை ஊக்க தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அகரம் அறக்கட்டளையின் மூலம் உதவித்தொகை பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் ?

  • அகரம் அறக்கட்டளையில் சேர்வதற்கு விண்ணப்பதாரர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
  • கிராமப்புற பகுதியில் செயல்படும் அரசு பள்ளியில் படித்திருக்க வேண்டும்.
  • நடப்பு கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுபவராக இருக்க வேண்டும்.
  • பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
  • கல்லூரி படிப்பில் சேர முதல் பட்டதாரியாக இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள் :

  • ஆதார் கார்டு
  • நிரந்தர வீட்டு முகவரி சான்றிதழ்
  • வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர் என்பதற்கான அடையாள அட்டை
  • ரேஷன் அட்டை
  • பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
  • குடும்பப் பின்னணி தொடர்பான கடிதம்
  • ஜாதி சான்றிதழ்
  • வங்கி கணக்கு

கல்வி ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி ?

  • விதை ஊக்கத்தொகைக்கு மாணவர்கள் அகரம் அறக்கட்டளையின் https://agaram.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள நடப்பு ஆண்டுக்கான உதவித்தொகை "Agaram Foundation Scholarship 2025 For College Students" என்ற பக்கத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  • அந்த விண்ணப்பத்தில் தேவையான தகவல்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  • பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரையாண்டு, காலாண்டு தேர்வுகளில் எடுக்கும் மதிப்பினை வைத்தும் பரிசீலனை செய்வர்.
  • குடும்பப் பின்னணியும் காரணியாக எடுத்துக் கொள்ளப்படும்.
  • மாணவர் என்ன படிக்க விரும்புகிறார்? என்பதை தெரிந்து கொள்ள நேர்காணலும் நடைபெறும்.
  • மாணவர்களின் வீட்டுக்குச் சென்று தன்னார்வலர்கள் மாணவரின் நிதி நிலைமையை அறிந்து நிர்வாக குழுவுக்கு அனுப்பி வைப்பார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டத்தின் கீழ் தொடக்கத்தில் 6000 மாணவர்கள் பயின்று வந்த நிலையில், தற்போது 2000 க்கு அதிகமான மாணவர்கள் அகரம் அறக்கட்டளையின் உதவியுடன் படித்து வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரமும் மேம்பட்டு இருக்கிறது.