One Nation One Election: மீண்டும் குரலை உயர்த்தும் "ஒரே நாடு ஒரே தேர்தல்" விவகாரம்.. முந்தைய வரலாறு என்ன?..!

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பான உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றது.

One Nation One Election (Photo Credit: LatestLY)

செப்டம்பர் 19, புதுடெல்லி (New Delhi): நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் (One Nation One Election) ஆகும். இது தொடர்பாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று (செப்டம்பர் 18) ஒப்புதல் அளித்தது.

இந்த ஒப்புதலுக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது நாட்டில் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். அதே நேரம் கேரள முதல்வர் பினராயி விஜயன் அனைத்து மாநில அதிகாரங்களும் பறிக்கப்பட்டு மத்திய அரசிடம் குவிக்க வகை செய்யும் திட்டம் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் அவ்வப்போது தேர்தல் நடைபெறுவதால் நாட்டின் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதால் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். Wrestler Vinesh Phogat Turned Politician: காங்கிரஸில் இணைந்த ஒலிம்பிக் நாயகி வினேஷ் போகத்.. அரசியலில் ஜொலிப்பாரா..?

ஒரே நாடு ஒரே தேர்தல்: இத்திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முடியும். முதல் கட்ட தேர்தல் முடிந்த 100 நாட்களுக்குள் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல்களும் நடத்தப்படும். இதன் மூலம் உள்ளூர் அரசியலமைப்புகளும் ஒரே நேரத்தில் புதுப்பிக்க முடியும். இந்தத் திட்டத்தின் மூலம் தேர்தல் காலத்தில் நாடு முழுவதும் விரிவான பிரச்சாரங்கள் நடத்தப்படும். இந்த முறையை செயல்படுத்தினால் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் மூன்று மாத காலம் மட்டுமே தேர்தல் காலமாக இருக்கும். தேர்தலில் செலவுகள் குறையும். வாக்குப்பதிவு அதிகரிக்கும், வேட்பாளர்கள் கறுப்புப் பணத்தையும் ஊழல் பணத்தையும் தேர்தலுக்குப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த முடியும்.

வரலாறு: 1951-52 ஆம் ஆண்டில் நடந்த முதல் பொதுத் தேர்தலின் போது, ஒரே நேரத்தில் நாடு முழுவதும் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டது, 1967 வரை இந்த நடைமுறை தொடர்ந்தது. அதன்பிறகு தொடர்ந்து மக்களவை மற்றும் சட்டமன்றங்கள் முன்கூட்டியே கலைக்கப்பட்டதால், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறை கலைந்தது. 1983-ம் ஆண்டிலும் , 1999-ம் ஆண்டிலும் மீண்டும் பழைய நடைமுறைக்குத் திரும்புவதற்கான சாத்தியங்கள் பரிசீலிக்கப்பட்டன. MLA Munirathna Case: பாஜக எம்.எல்.ஏ. முனிரத்னா மீது பாலியல் வழக்கு.. பெண் பரபரப்பு புகார்..!

பாதகங்கள்: இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதினால் சில மாநிலங்களில் சட்டமன்ற பதவிக்காலத்தை குறைக்கவும் சில மாநிலங்களில் நீட்டிக்கவும் வேண்டி இருக்கும். இதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்து ஒற்றுமை வேண்டும். இந்தத் திட்டத்தினை அவசரமாக செயல்படுத்துவதன் மூலம் மாநில மற்றும் மத்தியில் செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான மோதல்கள் அதிகரிக்கவும் பிரிவினைவாத சக்திகள் வலுவடைவதையும் காணக்கூடும். எனவே அனைத்து சாதக பாதங்களையும் ஆராய்ந்து அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்து ஒற்றுமையுடன் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதே சிறந்த முடிவாக இருக்கும்.