School Sexual Abuse: எல்கேஜி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. வெடித்த போராட்டம்..!
மகாராஷ்டிராவில் பள்ளிக் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து வெடித்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
ஆகஸ்ட் 21, பத்லாபூர் (Maharashtra News): மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் ஒரு பள்ளியில் மூன்று மற்றும் நான்கு வயதுடைய இரண்டு சிறுமிகளை பள்ளியின் உதவியாளர் கடந்த 17-ம் தேதி தகாத இடங்களில் தொட்டு அத்துமீறியதாகக் (Sexual Abuse) கூறப்படுகிறது. பள்ளியின் கழிவறையில் நடந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் குறித்து இரு குழந்தைகளும் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இது பற்றி பெற்றோரும், அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலரும் பத்லாப்பூர் கிழக்கு காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தனர்.
பள்ளி பணியாளர்கள் கைது: காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது 11 மணி நேரம் காத்திருக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பத்லாபூர் முழுவதும் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் பள்ளி பணியாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே இந்த சம்பந்தப்பட்ட பள்ளியில் உள்ள பொருட்களையும் போராட்டக்காரர்கள் சூறையாடினர். மேலும் ரயில்களை மறித்து (Badlapur station) போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சில ரயில்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன. Bharat Bandh 2024: இன்று பாரத் பந்த் வேலைநிறுத்த போராட்டம்.. வடமாநிலங்களில் தீவிரம்..!
வெடித்த போராட்டம்: இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இந்த தடியடி சம்பவத்தை தொடர்ந்து சில இடங்களில் மோதல் சம்பவம் அதிகரித்த நிலையில் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை மகாராஷ்டிரா அரசு அமைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 2 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மகாராஷ்டிரா மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.