Delhi New CM Atishi: ராஜினாமா செய்யும் அரவிந்த் கெஜ்ரிவால்.. டெல்லியின் புதிய முதல்வர் ஆன அதிஷி..!

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Arvind Kejriwal | Atishi (Photo Credit- @ANI X)

செப்டம்பர் 17, புதுடெல்லி (New Delhi): டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சியில் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) உள்ளார். டெல்லியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரில், புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இந்த கொள்கையின் படி, 32 மண்டலங்களாக டெல்லியை பிரித்தனர். மேலும் அங்குள்ள 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதில் ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது: இதையடுத்து ஆளுநர் விகே சக்சேனா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். சிபிஐ விசாரணை தொடங்கிய நிலையில் டெல்லி அரசு புதிய மதுபான கொள்கையை திரும்ப பெற்றது. மேலும் அந்த சமயம் புதிய மதுபான கொள்கை ஊழலில் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டது. பின்னர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் இருந்துவந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன்: இரு பிரிவுகளில் கைது நடவடிக்கையை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். முதலில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதும், அவர் சி.பி.ஐ. வழக்கில் கைது செய்யப்பட்டிருந்ததால் வெளியே வரவில்லை. அதன்பிறகு சி.பி.ஐ. வழக்கிலும் அவருக்கு உச்சநீதிமன்றம், கோப்புகளில் கையெழுத்து இடக்கூடாது, முதல்வர் அலுவலகம் மற்றும் தலைமை செயலகம் ஆகியவற்றுக்கு செல்லக் கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து கடந்த 13ம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஆறு மாதத்திற்கு பிறகு கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்தார். Gold Theft Caught on Camera: கல்யாண் ஜூவல்லர்ஸ் ஷோரூமில் பெண்கள் கைவரிசை.. சிசிடிவியால் அம்பலமான உண்மை.!

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா: உச்ச நீதிமன்றத்தால் கடந்த வெள்ளிக் கிழமை ஜாமீனில் வெளிவந்த கெஜ்ரிவால் நேற்று, இன்னும் இரண்டு நாள்களில் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகத் தெரிவித்தார். அதோடு, 2025 பிப்ரவரியில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை குற்றவாளி இல்லை எனத் தீர்ப்பளித்த பிறகு, முதல்வர் பதவியை ஏற்பேன் என்றும் கூறியிருந்தார். இதனால், ஆம் ஆத்மியிலிருந்து முதல்வர் நாற்காலியில் அமரப்போகிறவர் யார் என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. இன்று மாலை லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாவை சந்தித்து தான் பதவி விலகுவதாக கடிதத்தை சமர்ப்பிக்கிறார்.

டெல்லியின் புதிய முதல்வர்: இந்நிலையில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு மதியம் 12 மணிக்கு புதிய முதலமைச்சர் யார் என்று அறிவிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது. அதன்படி, கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அதிஷி (Atishi), டெல்லியின் அடுத்த முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கல்வி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரான இவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி. மேலும், கெஜ்ரிவால் சிறையிலிருந்தபோது, ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றுவதற்கு இவரையே தேர்வுசெய்தார். கெஜ்ரிவால் சிறையிலிருந்தபோது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்திவந்தவரும் இவரே.