World Standards Day 2024: உலக தரநிலைகள் தினம்.. இந்தியாவின் தர நிர்ணய அமைப்பு பற்றி தெரியுமா?!
உலகத் தரநிலைகள் தினமானது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகின்றது.
அக்டோபர் 14, சென்னை (Special Day): உலகம் முழுவதும் ஆண்டுதோறும் அக்டோபர் 14 ஆம் நாளன்று உலக தரநிலைகள் தினம் (World Standards Day) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (I.S.O), அனைத்துலக மின் தொழில்நுட்ப ஆணையம் (I.E.C), அனைத்துலகத் தொலைத்தொடர்பு ஒன்றியம் (I.T.U) ஆகிய நிறுவனங்களின் வழிமுறைகளுக்கு உட்பட்டு உலகத் தரங்களை உருவாக்கப் பாடுபடும் தொழில்துறை வல்லுநர்களின் சேவையைப் பாராட்டுகின்றனர். மேலும் பொருள்கள் மற்றும் சேவைகளில் விளங்க வேண்டிய சீர்மைத் தன்மையின் அவசியத்தை உலகளாவிய ரீதியில் வலியுறுத்த இந்த நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகின்றது. 1969 ஆம் ஆண்டிலிருந்து, அக்டோபர் 14 ஆம் நாளை, உலகத் தர நிர்ணய நாளாகக் கடைப்பிடிக்கின்றன.
சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (I.S.O), தொழில்நுட்பம், மேலாண்மை மற்றும் உற்பத்தியின் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய பன்னாட்டுத் தர நிலைகளாக 25,613 எனும் எண்ணிக்கையைக் கொண்டிருக்கிறது. இவ்வமைப்பில் 172 நாடுகள் உறுப்பினர்களாக இணைந்திருப்பதுடன், இவ்வமைப்பின் கீழ் 841 தொழில்நுட்பக் குழுக்கள் மற்றும் துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தர மேம்பாட்டைக் கவனித்துக் கொள்கின்றன. சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (I.S.O) எனும் அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராகச் சேர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரே சீரான தர முறைகளை வகுப்பதிலும், சான்றளிப்பதிலும் இந்தியத் தர நிர்ணய அமைப்பு (Bureau of Indian Standards - BIS) ஈடுபட்டுள்ளது. International Day of the Girl Child 2024: "அத்துமீறும் ஆண்களையும் அச்சமின்றி பொசுக்கிடும் அக்னி பிழம்பு" சர்வதேச பெண் குழந்தைகள் தினம்.!
இந்தியத் தர நிர்ணய அமைப்பு: இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாக இந்திய தர நிர்ணய அமைவனம் உள்ளது. இந்நிறுவனம் தொழில்துறையின் நலனுக்காகவும், நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டும் தயாரிப்பு சான்றிதழ் (ஐ.எஸ்.ஐ முத்திரை ), மேலாண்மை அமைப்புகள் சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் / கலைப் பொருட்களுக்கான ஹால் மார்க்கிங் முத்திரை மற்றும் ஆய்வக சேவைகளின் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்) 14 அக்டோபர் அன்று உலக தர நிர்ணய தினத்தைக் கொண்டாடுகிறது. இது தர நிர்ணய பணியில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான நிபுணர்களின் கூட்டு முயற்சிகளை அங்கீகரிப்பதற்கும் எதிர்கால பாதையில் பயணிப்பதற்கும் ஆகும். இவை வழியாகத் தரத்தை உறுதிப்படுத்தி, வாடிக்கையாளர்களுக்குத் தரமான பொருட்கள் கிடைக்க வழி செய்கின்றன.