வானிலை: இன்று 19, நாளை 21 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழையால் தமிழ்நாட்டில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
அக்டோபர் 24, சென்னை (Chennai News): வானிலையில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பொறுத்தவரையில், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணை, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதிகளில் 12 செமீ மழை பெய்துள்ளது. கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ஈரோடு, கோவை, தர்மபுரி, நீலகிரி, தேனி, சேலம், வேலூர், திருநெல்வேலி, வேலூர், தென்காசி, மயிலாடுதுறை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 34.6 டிகிரி செல்ஸியஸ் வெப்பமும், ஈரோட்டில் 16.2 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது.
டானா புயல்:
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையில், நேற்று (23-10-2024) மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த “டானா புயல்”, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இரவு 23:30 மணி அளவில் தீவிர புயலாக வலுபெற்றது. மேலும், இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (24.10.2024) காலை 08:30 மணி அளவில், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், பாரப்பிற்கு (ஒரிசா) தென்கிழக்கே 210 கிலோமீட்டர் தொலைவிலும், தாமரா (ஒரிசா) தெற்கு தென் கிழக்கே 240 கிலோமீட்டர் தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு (மேற்கு வங்காளம்) தெற்கே 310 கிலோமீட்டர் தொலைவிலும், நிலைகொண்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி:
இது மேலும், வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒரிசா மற்றும் மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே, பிதர்கனிகா மற்றும் தாமரா (ஒரிசா) அருகே மிகத்தவிர புயலாக, 24ஆம் தேதி நள்ளிரவு - 25ஆம் தேதி காலை கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில், அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. Job Alert: செங்கல்பட்டு, புதுக்கோட்டை, சேலம் இளைஞர்களே ரெடியா? மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. விபரம் உள்ளே.!
இன்றைய வானிலை (Today Weather):
24.10.2024 இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளைய வானிலை (Tomorrow Weather):
25.10.2024 நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 26.10.2024 அன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27.10.2024 முதல் 30.10.2024 வரையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை நிலவரம் (Chennai Weather Forecast):
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34” செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Fishermen Warning):
24.10.2024 முதல் 25.10.2024 வரையில் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 24.10.2024 மாலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 95 முதல் 105 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 115 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் 24-10-2024 மாலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 95 முதல் 105 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 115 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். Drunken Man Atrocity: ஓட்டுனரின் மடியில் போதை ஆசாமி.. குழந்தைபோல அடம்பிடித்து அடாவடி.. திருப்பூரில் பகீர்.!
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள்:
24-10-2024 காலை முதல் சூறாவளிக்காற்று மணிக்கு 95 முதல் 105 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 115 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து, 24 - ஆம் தேதி மாலை மணிக்கு 105 முதல் 115 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 125 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்கு வங்காளம் மற்றும் ஒரிசா கடற்கரை பகுதிகள்:
24-10-2024 காலை முதல் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து, 25 - ஆம் தேதி காலை வரை வடக்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில், மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 24 - ஆம் தேதி மாலை முதல் 25-ஆம் தேதி காலை வரை தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் மணிக்கு 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்:
24-10-2024 முதல் 25-10-2024 காலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
24.10.2024 மற்றும் 25.10.2024 வரை:
கேரள கடலோரப்பகுஇகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
காற்றின் வேகம் / புயல் நகர்வுகள், வானிலை குறித்த தகவலை துல்லியமாக உடனுக்குடன் பெற Windy.com-ல் இணைந்திருங்கள்.