BJP Annamalai: தமிழகத்தையே உலுக்கிய கிருஷ்ணகிரி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய 2 மரணங்கள்: அண்ணாமலை சந்தேகம்.!

17 க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில், முக்கிய குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட சிவராமன் மற்றும் அவரின் தந்தை அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தேகம் எழுப்பி இருக்கிறார்.

Sivaraman | K Annamalai (Photo Credit: @shanmugamchin10 / @annamalai_k X)

ஆகஸ்ட் 23, சென்னை (Chennai News): கிருஷ்ணகிரி (Krishnagiri) மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டினம் (Kaveripattinam), கந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில், என்.சி.சி (Fake NCC Camp) வகுப்புகள் நடத்துவதாக உரிய அனுமதி மற்றும் சான்றிதழ் இன்றி திட்டமிட்டு பள்ளி மாணவிகளை (School Girl Sexual Abuse) பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் சமீபத்தில் அம்பலமாகி அதிர்ச்சியை தந்தது. இந்த விவகாரத்தில் மொத்தமாக 17 மாணவிகள் பாதிக்கப்பட்டது காவல்துறையினரின் விசாரணையில் அம்பலமான நிலையில், 13 வயது மற்றும் 14 வயதுடைய 2 சிறுமிகள் மட்டுமே பர்கூர், கிருஷ்ணகிரி காவல் நிலையங்களில் தங்களுக்கு நடந்த அநீதி குறித்து புகார் அளித்துள்ளனர்.

சிவராமன் கைது:

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முன்னாள் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை பொறுப்பாளர் சிவராமன் என்பவரை முக்கிய குற்றவாளியாக கைது செய்தனர். இவர் கைது நடவடிக்கையின்போது தப்பிச்செல்ல முயற்சித்து கால்களையும் உடைத்துக்கொண்டார். இவரிடம் பெற்ற வாக்குமூலத்தின் பேரில் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியைகள் என 11 பேர் மொத்தமாக இவ்வழக்கில் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், இவ்விவகாரம் தொடர்பாக 100 நாட்களுக்கு விசாரணை நடத்தி அனைத்தையும் நிறைவு செய்ய உத்தரவிட்டு இருந்தார். மேலும், தேசிய மகளிர் ஆணையமும் 3 நாட்களுக்குள் அறிக்கை கேட்டு இருந்தது.

சிகிச்சை பலனின்றி பலி:

இதனிடையே, கணவன் - மனைவி சண்டையில் கைது நடவடிக்கைக்கு முன்னதாகவே சிவராமன் எலி மருந்து சாப்பிட்டதாக கூறப்படும் நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இன்று (23 ஆகஸ்ட் 2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், அவரின் தந்தை அசோக் குமார், காவேரிப்பட்டினம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே விபத்தில் சிக்கி நள்ளிரவில் உயிரிழந்தார். அடுத்தடுத்த இந்த மரணத்தினால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. Krishnagiri School Girl Rape Case: கிருஷ்ணகிரி பள்ளி மாணவிகள் பலாத்கார விவகாரம்; முக்கிய குற்றவாளி சிவராமன் தற்கொலை., தந்தையும் விபத்தில் பலி.! 

அண்ணாமலை சந்தேகம்:

இந்நிலையில், இருவரின் மர்ம மரணம் தொடர்பாக சந்தேகம் எழுப்பியுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் பதிவில், "கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன், காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே, எலி மருந்து சாப்பிட்டு, இன்று காலை உயிரிழந்துள்ளதாகக் கூறுகின்றனர். மேலும், அவரது தந்தை அசோக் குமார் என்பவரும், நேற்று இரவு சாலை விபத்தில் மரணமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

ஒரேநேரத்தில் வெவ்வேறு இடங்களில் மரணம் எப்படி?

இந்த இரண்டு மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், சிவராமன் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது. உண்மையில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா அல்லது யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, தந்தை, மகன் இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா என்ற பலத்த சந்தேகம் எழுகிறது.

சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு வலியுறுத்தல்:

பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான பதில்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார். இதனால் சிவராமன் மற்றும் அவரின் தந்தை அசோக் குமார் மரணத்தில் மர்மம் நீடிப்பதாக குரல்கள் எழுப்பப்பட்டுள்ளன.

அண்ணாமலையின் எக்ஸ் வலைதளப்பதிவு: