Sivaraman | Death Hand File Pic (Photo Credit: @shanmugamchin10 X)

ஆகஸ்ட் 23, காவேரிப்பட்டினம் (Krishnagiri News): கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டினம், கந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், 13 வயது சிறுமி உட்பட 12 க்கும் மேற்பட்டோரை போலியான என்.சி.சி முகாம் பெயரில் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இந்த விஷயம் குறித்து பாதிக்கப்பட்ட 8ம் வகுப்பு மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பள்ளியின் முதல்வர், தாளாளர், ஆசிரியைகள் உட்பட 11 பேர் கைது:

இந்த புகாரின் பேரில் முன்னாள் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சிவராமன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருடன் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியைகள் என 11 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். விசாரணையில், இவர்கள் நடத்திய போலியான என்.சி.சி முகாம்கள் வெவ்வேறு கல்வி நிறுவனங்களில் முன்னெடுக்கப்பட்டதும், போலியான சான்றிதழை மாணவிகளுக்கு கொடுத்ததும் தெரியவந்தது. இந்த கும்பலால் மாணவிகள் பாதிக்கப்பட்டு இருந்தால் புகார் அளிக்கலாம் என காவல்துறையும் கேட்டுக்கொண்ட நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் சிறுமி, சிவராமனின் மீது கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், சிவராமன் 7 நபர்களிடம் போலியான நீதிமன்ற ஆணையை காண்பித்து ரூ.36 இலட்சம் அளவில் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்தும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. Aavin Employee Death: ஆவின் பால் உற்பத்தி மையத்தில் பயங்கரம்; இயந்திரத்தில் சிக்கி தலை துண்டாகி இளம்பெண் பலி.!

சிவராமன் பலி:

கைது நடவடிக்கையின்போது வழுக்கி விழுந்த சிவராமனின் கால்களில் முறிவும் ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான சிவராமன், கைதுக்கு முன்னதாகவே கணவன் - மனைவி குடும்பச்சண்டையில் எலி பேஸ்ட் சாப்பிட்டு இருக்கிறார். விசாரணையின்போது அவருக்கு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், தான் எலி பேஸ்ட் சாப்பிட்டதாக கூறி இருக்கிறார். இதனால் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

சிவராமனின் தந்தையும் விபத்தில் மரணம்:

இதனிடையே, சிவராமனின் தந்தை அசோக் குமார், நேற்று நள்ளிரவு நேரத்தில் காவேரிப்பட்டினம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டப பகுதியில் வந்துகொண்டு இருந்தபோது, போதையில் நிலைதடுமாறி விழுந்து, விபத்தில் சிக்கி தலையில் படுகாயம் அடைந்தார். அவரும் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்விவகாரத்தில் 15 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள அதேவேளையில், 3 நாட்களுக்குள் தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.