IT Parks: தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா; ஐடி ஊழியர்களின் வேலைவாய்ப்பு; தமிழ்நாடு முதல்வர் அசத்தல்.!
ஸ்டாலின் திறந்து வைத்தார்.
செப்டம்பர் 24, தஞ்சாவூர் (Thanjavur News): தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (23.9.2024) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், தமிழ்நாட்டிலுள்ள சிறு நகரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினை கொண்டு செல்லும் நோக்கத்துடன் தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், பிள்ளையார்பட்டி கிராமத்தில் 30.50 கோடி ரூபாய் செலவிலும் மற்றும் சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், கருப்பூர் கிராமம், ஆனைக்கவுண்டன்பட்டியில் 29.50 கோடி ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை திறந்து வைத்தார்.
அமெரிக்க அரசுப்பயணத்தில் ரூ.7616 கோடி முதலீடு ஈர்ப்பு:
இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு நிர்ணயித்து, அதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் தமிழ்நாடு முதலமைச்சர் அண்மையில் அமெரிக்க நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு 19 நிறுவனங்களுடன் 7616 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மினி டைடல் பூங்கா:
எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்படக்கூடிய அதீத வளர்ச்சியை கருத்திற்கொண்டு 2000-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் தொலைநோக்கு பார்வையுடன் சென்னை தரமணியில் டைடல் பூங்காவை நிறுவி, திறந்து வைத்தார். இது நம் மாநிலம் முழுவதும் தகவல் தொழில்நுட்பத்துறையில் மாபெரும் வளர்ச்சி ஏற்பட வித்திட்டது. "பரவலான வளர்ச்சியே பார் போற்றும் வளர்ச்சி, சீரான வளர்ச்சியே சிறப்பான வளர்ச்சி! என்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கேற்ப, தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மினி டைடல் பூங்காவை 17.2.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை நேற்றைய தினம் முதலமைச்சர் திறந்து வைத்தார். அதன் விவரங்கள்: TN Govt Scheme: ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1500/-.. விண்ணப்பிப்பது எப்படி?.. விபரம் உள்ளே.!
தஞ்சாவூர் மினி டைடல் பூங்கா:
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், பிள்ளையார்பட்டி கிராமத்தில் 30 கோடியே 5௦ இலட்சம் ரூபாய் செலவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 55,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்து, தஞ்சாவூர் மினி டைடல் பூங்கா கட்டடத்தில் ஆகிய நிறுவனங்களுக்கு தள ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை வழங்கினார். தஞ்சாவூர் மினி டைடல் பூங்கா கட்டடத்தில் 30 சதவிகித தள ஒதுக்கீடு தற்போது வரை வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மினி டைடல் பூங்கா:
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், கருப்பூர் கிராமம், ஆனைக்கவுண்டன்பட்டியில் 29 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 55,000 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று திறந்து வைத்து, சேலம் மினி டைடல் பூங்கா கட்டடத்தில் ஆகிய நிறுவனங்களுக்கும் தள ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை வழங்கினார். சேலம் மினி டைடல் பூங்கா கட்டடத்தில் 71 சதவிகித தள ஒதுக்கீடு தற்போது வரை வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மற்றும் சேலம் மினி டைடல் பூங்காக்களில் உள்ள வசதிகள்:
மினி டைடல் பூங்கா கட்டடங்களில் தலா 500 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் குளிர்சாதன வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு மற்றும் கட்டட மேலாண்மை வசதிகள், மின் விளக்குகளுடன் கூடிய உட்புற சாலை வசதிகள், 24X7 பாதுகாப்பு வசதிகள், உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மினி டைடல் பூங்காக்கள் திறக்கப்பட்டதன் மூலமாக தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் அம்மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .