Fire Accident In Apartment: அடுக்குமாடி குடியிருப்பில் மின்கசிவால் தீ விபத்து; ஒரு வயது குழந்தை பலி.. 3 பேர் தீக்காயம்..!
திருத்தணியில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 3 பேர் தீக்காயமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 06, திருத்தணி (Tiruvallur News): திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகப்பா நகர் பகுதியில் உள்ள 3 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் (Apartment) முதல் தளத்தில் வசிப்பவர் பிரேம்குமார் (வயது 32). இவரது வீட்டின் கீழ் பகுதியில் இன்று (செப்டம்பர் 06) அதிகாலை 2 மணியளவில் மின் கசிவு (Electrical Leakage) ஏற்பட்டு, பற்றி எரிந்த தீ (Fire Accident) அருகில் இருந்த 3 இருசக்கர வாகனத்தின் மீது பரவியது. இதனைத்தொடர்ந்து பிரேம்குமார் வசித்த வீட்டினுள் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதில் சிக்கிய பிரேம்குமார், அவரது மனைவி மஞ்சுளா (வயது 31), குழந்தைகள் மிதுலன் (வயது 2), நபிலன் (வயது 1) உள்ளிட்ட 4 பேரும் தீக்காயம் அடைந்தனர். Govt Hostel Issue: விடுதியில் நடக்கும் அவலம்.. எதிர்த்து கேள்வி கேட்கும் மாணவர்களை மிரட்டும் வார்டன்..!
இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருத்தணி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, 4 பேரையும் மீட்டனர். திருத்தணி காவல்துறையினர், தீ விபத்தில் படுகாயமடைந்த 4 பேரையும் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற 4 பேரும் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை நபிலன் உயிரிழந்தார். மற்ற 3 பேரும் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். இதுகுறித்து, திருத்தணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்துக்கு மின் கசிவு காரணமா? அல்லது வேறேதும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.