நவம்பர் 27, கிறைஸ்ட்சர்ச் (Sports News): இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்தில் (NZ Vs ENG Test Series 2024) சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச் (Christchurch) நகரில் நாளை (நவம்பர் 28) தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 5 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. IPL Auction 2025: ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்களின் பட்டியல்.. விலை, அணி மற்றும் முழு விவரம் உள்ளே..!
இந்த டெஸ்ட் தொடருக்கு குரோவ்-தோர்ப் டிராபி (Crowe-Thorpe Trophy) என பெயரிடப்பட்டுள்ளது. மறைந்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் குரோவ் (Martin Crowe) மற்றும் இங்கிலாந்தின் கிரஹாம் தோர்ப் (Graham Thorpe) ஆகியோரை கவுரவிக்கும் விதமாக இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. இதில், முக்கிய சிறப்பம்சமாக இரு வீரர்களின் மட்டைகளிலிருந்து பெறப்பட்ட மரத்திலிருந்து கோப்பை வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரஹாம் தோர்ப் குடும்பத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மட்டை அவர், 1997-ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக தனது முதல் 2 டெஸ்ட் சதங்களை அடிக்க பயன்படுத்தப்பட்டதாகும்.
அதே நேரத்தில் மார்ட்டின் குரோவ் குடும்பத்தினர் வழங்கிய மட்டை அவர், 1994-ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்க பயன்படுத்தியதாகும். நியூஸிலாந்தின் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாகக் கருதப்படும் குரோவ் 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 17 சதங்களுடன் 45.36 சராசரியைக் கொண்டிருந்தார். அவர், கடந்த 2016-ஆம் ஆண்டு மரணமடைந்தார். இங்கிலாந்தின் கிரஹாம் தோர்ப் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 சதங்களுடன், 44.66 சராசரியை கொண்டிருந்தார். இவர், இந்த 2024-ஆம் ஆண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார்.