நவம்பர் 25, ஜெட்டா (Sports News): இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் (IPL 2025) தொடருக்கான ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா (Jeddah) நகரில் நடைபெற்று வருகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த ஐபிஎல் ஏலத்தில் அனைத்து அணிகளும் ரூ.120 கோடி வரை வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், வீரர்களை தக்கவைப்பதற்காகவும், ஏலத்தின் முதல் நாளான நேற்று (நவம்பர் 24) 84 வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டார்கள். அவர்களில் 72 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டார்கள். மீதம் உள்ள 12 பேர் அன்சோல்டு ஆனார்கள்.
முதல் நாள் ஏலத்தில் அதிகபட்சமாக ரிஷப் பன்ட்டை (Rishabh Pant) ரூ.27 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது. ஸ்ரேயஸ் ஐயர் ரூ.26 கோடியே 50 லட்சத்திற்கு பஞ்சாப் எடுத்தது. தமிழக வீரர் அஸ்வின் 10 ஆண்டுக்கு பின் சிஎஸ்கே அணிக்கு திரும்பினார். இந்நிலையில், 2ஆம் நாள் ஏலம் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஏலத்தின் மதிய உணவு இடைவேளை வரை உள்ள பட்டியலை இதில் பார்ப்போம். முதலாவதாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மற்றும் வெஸ்ட் இண்டீஸின் ஷாய் ஹோப், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி, தென்னாப்பிரிக்காவின் டானவன் ஃபெரீரா ஆகிய வீரர்கள் அன்சோல்டு ஆகினர். வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மேன் பவலை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.1.5 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. பாஃப் டூ பிளெஸ்ஸிஸ்சை டெல்லி அணி 2 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியது. IPL Auction: மிகவும் விலையுயர்ந்த வீரராக ரிஷப் பண்ட்... ரூ.27 கோடிக்கு ஏலம்.. புதிய சாதனை.!
இதனிடையே கே.எஸ்.பரத், அஜிங்க்யா ரஹானே, மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, ஷர்துல் தாக்கூர் ஆகிய இந்திய வீரர்களை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. அடுத்து களமிறங்கும் வீரர் வாஷிங்டன் சுந்தரை குஜராத் அணி 3.2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. சென்னை அணியின் முன்னாள் வீரர் சாம் கர்ரனை (Sam Curran) சிஎஸ்கே அணி 2.4 கோடிக்கு ஏலம் எடுத்தது. மேலும், மார்கோ ஜான்சன் (Marco Jansen) ரூ.7 கோடிக்கும், ஜாஸ் இங்லிஸ் ரூ.2.6 கோடிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சென்றனர். நிதிஷ் ராணா ரூ.4.2 கோடி, துஷார் தேஷ்பாண்டே ரூ.6.5 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். தென்னாப்பிரிக்காவின் ரியான் ரிக்கல்டனை ரூ.1 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்துள்ளது. ஜெரால்ட் கோட்ஸி ரூ.2.40 கோடிக்கு குஜராத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
இறுதியாக, க்ருனால் பாண்டியாவை ஏலம் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் போட்டி போட்ட நிலையில், ரூ.5.75 கோடிக்கு பெங்களூரு அணி ஏலம் எடுத்துள்ளது. புவனேஷ்வர் குமாரை (Bhuvneshwar Kumar) ஏலம் எடுக்க மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினர் கடுமையாக போட்டியிட்ட நிலையில், ரூ.10.75 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலம் எடுத்துள்ளது. இதன் மூலம் ஆர்சிபி அணி தங்களது பவுலிங் யூனிட்டை மேம்படுத்தியுள்ளனர்.