TN Govt signed with Evervan Kothari (Photo Credit: @TamilNaduInfra X)

பிப்ரவரி 26, சென்னை (Chennai News): தமிழகத்தில் கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனம் (Evervan Kothari Footwear Limited), ரூ.5000 கோடி முதலீடு மற்றும் 50,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தோல் அல்லாத காலணி உற்பத்தி திட்டத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது. வானிலை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை அலர்ட்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழக அரசு அதிரடி அறிவிப்பு:

இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக முதலமைச்சர் முக. ஸ்டாலின் (CM MK Stalin) முன்னிலையில் இன்று (பிப்ரவரி 26) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஃபீனிக்ஸ் கோத்தாரி (Phoenix Kothari Group) குழுமத்தின் துணை நிறுவனமான எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனம், கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், 5000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 50,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தோல் அல்லாத காலணி உற்பத்தி திட்டத்தை நிறுவுவதற்கு தமிழக அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் மற்றும் எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு:

தமிழக இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும், மாநிலத்தில் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திடவும், தமிழக அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. இதன் மூலம், தொழில்துறையில் பின்தங்கிய மாவட்டங்களான கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இத்தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதால், இம்மாவட்டங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் உருவாகும். இதனால், இப்பகுதி மக்களின் தனிநபர் வருமானம் அதிகரிப்பதுடன், பொருளாதாரமும் மேம்படும்.

முக்கிய தலைவர்கள் பங்கேற்பு:

இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, செயலாளர் வி. அருண் ராய், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது, எவர்வான் ஷுடவுன் குழுமத்தின் தலைவர் ரான், கோத்தாரி இண்டஸ்டிரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ரபீக் அகமது, செயல் துணைத்தலைவர் பி. கார்த்திகேயன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.