Apple Logo (Photo Credit: @APPLE X)

நவம்பர் 26, கலிஃபோர்னியா (Technology News): உலகளாவிய தொழில்நுட்ப துறையில் கடந்த சில ஆண்டுகளாகவே பணி நீக்கம், வேலை இழப்பு போன்ற பிரச்சனைகள் மிகப்பெரிய விவாதங்களை உண்டாக்கி இருக்கிறது. குறிப்பாக கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, இன்டெல், ஆரக்கல், சேல்ஸ் போர்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களிலிருந்து பணி நீக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஏஐ தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ததன் வாயிலாக பலருக்கும் வேலை இழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. ஐபோன், மாக், ஐபேட் போன்ற சாதனங்களை தயாரிக்கும் ஆப்பிள் (Apple) நிறுவனமும் கடந்த ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. Amazon Layoffs: அமேசானில் 14,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. மென்பொருள் பொறியாளர்களுக்கு கடும் தாக்கம்.!

விற்பனை பிரிவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஆப்பிள் நிறுவனம்:

இந்த நிலையில் தற்போது ஆப்பிள் நிறுவனம் தங்களது விற்பனை பிரிவில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்துவிட்டு நேரடி விற்பனை முறையில் ஈடுபடாமல், ஒப்பந்த அடிப்படையில் மூன்றாம் தர நிறுவனங்கள் வழியாக விற்பனையில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊழியர்களின் பணி நீக்கத்தை உறுதி செய்துள்ள ஆப்பிள் நிறுவனம், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பிற பிரிவுகளுக்கு மீண்டும் விண்ணப்பிக்கவும் அல்லது தங்களது நிறுவனத்தில் இருந்து வெளியேறவும் இறுதி தேதியாக 2026 ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதியை குறிப்பிட்டுள்ளது. விற்பனை பிரிவில் பணியாற்றிய ஊழியர்களில் பலரும் 20 முதல் 30 ஆண்டுகள் வரை நிறுவனத்திற்காக பணியாற்றி இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.