மார்ச் 06, ராமநாதபுரம் (Ramanathapuram News): ராமநாதபுரம் மாவட்டம் கழுகூரணியைச் சேர்ந்த பைரஜ், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிர்தவுஸ் பானு (வயது 43). இவர் தையல் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் திடீரென்று தனது வீட்டு பீரோ லாக்கரில் இருந்த தங்க நகைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில், சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருந்தன. இது குறித்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல் துறையினர் விசாரணை: புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேற்கொண்ட விசாரணையில் பிர்தவுஸ் பானுவின் மகளுடன் கல்லூரியில் படிக்கும் கீழக்கரையைச் சேர்ந்த அபிராஅல் (வயது 21) என்பவர் நகையை திருடியது தெரியவந்தது. அபிராஅல் தனது தோழி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, அவர் வீட்டில் நகைகள் இருப்பதைக் கண்டு அதனை திட்டம் போட்டு ஜாக்கெட் தைக்க கொடுப்பதுபோல் நடித்து அதனை போட்டுப் பார்ப்பதாக கூறி நகை இருக்கும் அறைக்கு சென்று திட்டமிட்டு நகையை திருடியுள்ளார்.
செலவு செய்துவிட்டதாக வாக்குமூலம்: ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரித்ததில், அபிராஅல் தான் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். திருடிய நகைகளை ராமநாதபுரத்தில் உள்ள நகைக்கடையில் ரூ.7 லட்சத்திற்கு விற்று பணத்தை செலவு செய்துவிட்டதாக கூறினார். இதன்பேரில் காவல்துறையினர் நகைகளை மீட்டனர்.