MK Stalin (Photo Credit: @MKStalin X)

நவம்பர் 26, சென்னை (Chennai News): தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்று (நவ.26) காலை 8.30 மணியளவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வடக்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது என்றும், நாகையில் இருந்து தெற்கே-தென்கிழக்கே 590 கிமீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 710 கிமீ தெற்கே-தென்கிழக்கே தொலைவிலும், சென்னைக்கு தென்-தென்கிழக்கே 800 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து நவம்பர் 27-ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளது. இந்நிலையில் பெங்கல் என புயலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஃபெங்கால் (Fengal) என்ற பெயரை சவுதி அரேபியா வைத்துள்ளது. வானிலை: உருவாகப்போகும் ஃபெங்கால் புயல்.. தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; மக்களே ஜாக்கிரதை..!

இதனை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் அவசர ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு துறை உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்க முதல்வர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி முன்னெச்சரிக்கையாக திருவாரூர், மயிலாடுதுறை. நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்பு படை குழுவும், மாநில பேரிடர் மீட்புப் படை குழுவும் விரைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 2 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவும் விரைந்துள்ளது. மேலும், மேற்படி மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு முதல்நிலை மீட்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.