TN Weather Report(Photo Credit: @ChennaiRains X)

மே 22, சென்னை (Chennai): சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, 24- ஆம் தேதி காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரக்கூடும்.

அதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் (The Chennai Meteorological Department) அறிக்கை வெளியிட்டுள்ளது. Pixar Layoffs: அடிக்கு மேல் அடிவாங்கும் டிஸ்னி: கைவிரித்த பிக்சர் அனிமேசன் நிறுவனம்..!

மீனவர்களுக்கான எச்சரிக்கை: கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு- மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

கேரள கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதனால் இன்று மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் ஆழ்கடல் மீனவர்கள் கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.