செப்டம்பர் 15, பொள்ளாச்சி (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி (Pollachi) அருகேயுள்ள கிராமத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 58 வயதான நபர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது மகள் அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், மகளுக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது தாயார் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு தனது மகளை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். வானிலை: சென்னை டூ தென்காசி.. இரவு 7 மணி வரை பொளக்கப்போகும் மழை.!
சிறுமி பாலியல் வன்கொடுமை:
இதுகுறித்து, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மாணவி பள்ளி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்றபோது, அப்பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை பார்த்த கவியரசன் (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் ஆசைவார்த்தை கூறி, மாணவியை பல்வேறு இடங்களுக்கு கூட்டிச் சென்று பாலியல் பலாத்காரம் (Sexual Assault) செய்துள்ளார்.
இருவர் கைது:
இதனையடுத்து, மாணவியின் தந்தைக்கு இந்த விவகாரம் தெரியவந்துள்ளது. தனது மகள் என்றும் பாராமல் அவரை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் போக்சோ வழக்குப்பதிவு செய்து மாணவியின் தந்தை மற்றும் கவியரசன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3