மே 10, சென்னை (Chennai): தமிழகத்தில் 10ம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 26 முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. இந்தத் தேர்வுகளை 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 4,57,525 மாணவர்கள், 4,52,498 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என, மொத்தம் 9,10,024 பேர் தேர்வு எழுதினர். அதோடு, 28,827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதினர். இந்த தேர்வானது, 4,107 மையங்களில் நடைபெற்றது. மேலும் பாடங்களின் தேர்வுக்கு முன்னதாக மூன்று முதல் ஐந்து நாட்கள் இடைவெளி வழங்கப்படும் வகையில் அமைக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் தயார் செய்ய போதுமான நேரம் கிடைத்தது. தொடர்ந்து, மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி, 88 முகாம்களில் ஏப்ரல் 12-ல் தொடங்கி 22-ம் தேதி வரை நடந்தது. இந்நிலையில் பொதுத்தேர்வு முடிவுகள் (TN SSLC Results) இன்று காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்ச்சி விகிதம்: கடந்த ஆண்டு 10ம் வகுப்புபொதுத்தேர்வில் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று இருந்த நிலையில், நடப்பாண்டில் 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 0.16 % கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் வழக்கம் போல மாணவர்களை விட, மாணவிகளே அதிகம் தேர்ச்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி மாணவிகள் 94.53% தேர்ச்சி பெற்றுள்ளனர். 88.58% அளவிற்கு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1,364 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. மொத்தம் 4,105 பள்ளிகள் இந்த தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. TN SSLC Results 2024 On tnresults.nic.in: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; அரியலூர் டாப்... வெற்றியை தட்டித்தூக்கிய மாணவிகள்.. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவு.!
மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதம்: மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில், 97.31 சதவீதத்துடன் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அதைதொடர்ந்து, சிவகங்கை மாவட்டம் 97.02 சதவீதத்துடன் 2வது இடத்தை பிடித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் 96.36 சதவீதத்துடன் 3வது இடத்தை பிடித்துள்ளது. வேலூர் மாவட்டம் 82.07% தேர்ச்சி பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளது.
பாடவாரியாக தேர்ச்சி விகிதம்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 8 பேரும், ஆங்கிலத்தில் 415 பேரும், கணிதத்தில் 20,691 பேரும், அறிவியலில் 5,104 பேரும் மற்றும் சமூக அறிவியலில் 4,428 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி மொழிப்பாடத்தில் 96.85 சதவிகிதமும், ஆங்கிலத்தில் 99.15 சதவிகிதம், கணிதத்தில் 96.78 சதவிகிதம், அறிவியலில் 96.72 சதவிகிதம் மற்றும் சமூக அறிவியலில் 95.74 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.