ஆகஸ்ட் 21, சென்னை (Cinema News): கொல்கத்தா மற்றும் கிருஷ்ணகிரி சம்பவங்களை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த 'நவீன நங்கையர் பவுண்டேஷன்' சார்பில் பிக் பாஸ் பிரபலமும், நடிகையுமான சனம் ஷெட்டி (Actress Sanam Shetty) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “போராட அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளோம். இதற்கு கண்டிப்பாக நீங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இந்த பாலியல் சீண்டல்கள் மருத்துவர்கள், பள்ளி குழந்தைகள் என அனைவரும் கடந்து வருகிறார்கள். அதனால் இந்த போராட்டத்தை நடத்த முடிவெடுத்துள்ளோம். தொடர்ந்து இந்த போராட்டம் குறித்த அறிவிப்புகளை தெரிவிக்கிறேன். ஏனென்றால் இது இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் நடக்கக்கூடிய ஒன்று.
குடும்பத்தில் இருப்பவர்களைக்கூட பெண்கள் நம்ப முடிவதில்லை. அந்த அளவிற்கு வருத்தமான சூழலில் நாம் இருக்கிறோம். இதைப் பற்றி முதலில் தயக்கமின்றி நாம் பேசி குரல் கொடுக்க வேண்டும். அதனால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோரும் எங்களுடன் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஒரு மாற்றம் தேவைப்படுகிறது அதை நம்மால்தான் கொண்டுவர முடியும். அதனால் எங்களுடன் இணைந்து வரும் சனிக்கிழமை போராட்டத்தில் பங்கேற்றுக் கொள்ளுங்கள். Hema Committee Report: "படுக்கைக்கு வந்தால் படவாய்ப்பு" - மலையாள திரையுலகின் அவல நிலை.. திடுக்கிடவைக்கும் ரிப்போர்ட்..!
ஹேமா கமிஷன் அறிக்கை: அதே போல ஹேமா கமிஷன் அறிக்கையில் மலையாள சினிமாவில் பாலியல் சீண்டல் தலைவிரித்து ஆடுவதாக அறிக்கை (Hema Committee) வெளியாகி உள்ளது. அதை வெளியிட்ட ஹேமா மேடத்துக்கும் அந்த குழுவிற்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அட்ஜெஸ்ட்மெண்ட் கேரள சினிமாவில் மட்டுமில்லை தமிழ் சினிமாவிலும் இருக்கு, என்னிடம், இதுபோல அட்ஜஸ்ட்மென்ட் கேட்டவர்களை, அந்த இடத்திலேயே செருப்பால அடிப்பேன் டா நாயே என்று சொல்லி இருக்கேன். அதற்காக சினிமாவில் அனைவரும் அப்படித்தான் என்று சொல்லவில்லை. ஒழுக்கமான எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
தினம் தினம் பாலியல் சீண்டல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்கு பயந்து, பெண்களை வெளியில் அனுப்பாமல், அந்த ஆடைகளை போடாதே, யாரையும் நம்பாதே என்று சொல்லி வளர்த்துக்கொண்டு இருக்கிறோம். அடிப்படை மாற்றத்தை ஆண்களின் மனதில் கொண்டு வர வேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் அதற்காகத்தான் இந்த போராட்டம், இது தான் சரியான நேரம், அடுத்த தலைமுறையிலாவது மாற்றம் வர வேண்டும்” என்றார்.