Cho Tharman | Mari Selvaraj (Photo Credit: @igtamil X)

ஆகஸ்ட் 29, சென்னை (Cinema News): கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் மாரி செல்வராஜ் (Mari Selvaraj) இயக்கத்தில் வெளியான வாழை (Vaazhai) படம் மிகவும் கவனத்தைப் பெற்றதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் உள்பட பலர் நடித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தை கதைக்களமாக இந்த திரைப்படம் கொண்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதையை 10 ஆண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதியுள்ளதாக சாதிக்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் (Cho Dharman) தெரிவித்துள்ளார்.

சோ. தர்மன் பதிவு: இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சினிமாவுக்கு வந்ததால் வாழை கதை தற்போது கொண்டாடப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கதையை எழுதியதை நினைத்து தற்போது மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ள சோ.தர்மன், வாழை தன்னை வாழ வைக்கவில்லை எனவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். Coolie Movie Update: கூலி படத்தில் இணைந்த பாலிவுட் ஸ்டார்.. வெறித்தனத்தில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்..!

மேலும் இதுகுறித்து பேட்டியில் அவர் பேசியதாவது, “என்னை சிலர் வாழை படம் பார்க்க சொன்னார்கள். ஏன் என கேட்டபோது, ‘உங்களது சிறுகதையை அப்படியே பயன்படுத்தி இருக்கிறார்’ என சொன்னார்கள். நான் குறிப்பிட்ட திரைப்படங்களை மட்டுமே பார்க்கக்கூடிய ஒரு ஆள். சரியென்று நேற்று திரைப்படம் பார்த்தேன். அது என்னுடைய வாழையடி... எனும் சிறுகதை. ஏன் வாழையடி என பெயர்வைத்து மூன்று புள்ளிகளை வைத்தேன் என்றால் வாழையடி வாழையாக குழந்தைகள் கஷ்டப்படுகிறார்கள் என்பதை குறிப்பிடத்தான் அப்படி பயன்படுத்தி இருந்தேன். ஒரு பிரச்னையை, ஒரு சம்பவத்தை ஒரு வடிவமாக்கி இலக்கியமாக்கி சிறுகதையாக நாவல்களாக யார் ஒருவர் முதலில் அடையாளம் கொடுத்து புத்தமாக வெளியிட்டு பதிப்புரிமை வைத்திருக்கிறார்களோ, அவருக்குத்தான் அந்த உரிமை செல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் பதில்: இந்நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், " வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ தர்மன்அவர்கள் எழுதிய வாழையடி என்கிற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை... அனைவரும் வாசிக்க வேண்டும் . எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.