ஜூன் 13, திருவனந்தபுரம் (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த தம்பதி அசோகன் - தனன்யா. தம்பதிகள் கடந்த 19.02.2006 அன்று லிவிங் டுகெதர் (Living Together) முறையில் சேர்ந்து வாழ விருப்பப்பட்டு இணைந்துள்ளனர். இவர்கள் இந்து - கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள். காதலால் மனதை வென்று மதங்களை கடந்து இணைந்தவர்கள். இருவருக்கும் தற்போது 16 வயதுடைய மகள் இருக்கிறார்.
இந்நிலையில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் எவ்வித பிரச்சனையும் இன்றி வாழ்ந்து வந்த தம்பதிகளுக்கு இடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் ஒருவரையொருவர் பிரிந்து செல்ல முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து, கேரளா மாநில உயர்நீதிமன்றத்தில் தம்பதிகள் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்த நிலையில், இன்று அம்மனு விசாரணை நீதிபதிகள் முகம்மது முஸ்டாயூ, சோபி தாமஸ் அமர்வில் நிறைவு பெற்று தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
அப்போது, தம்பதிகளுக்கு விவாகரத்து கொடுக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, "லிவிங் டுகெதர் முறையில் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகள், தங்களின் திருமணத்தை எங்கும் சட்டபூர்வமாக பதிவு செய்யவில்லை. இருவரும் ஆண்டாண்டுகள் இணைந்து வாழ்ந்தாலும், அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ள நிலையிலும் திருமணத்தை அவர்கள் சட்டப்படி பதிவு செய்யவில்லை என்பதால், இவ்வழக்குக்கு விவாகரத்து வழங்க இயலாது" என தீர்ப்பளித்தனர்.
இந்த வழக்கு விவகாரத்தில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், "தம்பதிகள் தங்களின் திருமணத்தை பதிவு செய்யவில்லை. இருவருக்கும் மனதளவில் பிடித்து லிவிங் டுகெதர் முறையில் சேர்ந்து வாழ்ந்தார்கள். இன்று அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிய நினைக்கிறார்கள். அவர்களின் பிரிவை இணைந்த சூழலில் எடுத்துக்கொள்ளலாம் என்பதால், இவ்வழக்கில் விவாகரத்து வழங்க இயலாது" என கூறினார்.