Akshay Shinde (Photo Credit: @nedricknews X)

செப்டம்பர் 24, பத்லாபூர் (Maharashtra News): மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் ஒரு பள்ளியில் மூன்று மற்றும் நான்கு வயதுடைய இரண்டு சிறுமிகளை பள்ளியின் உதவியாளர் கடந்த 17-ம் தேதி தகாத இடங்களில் தொட்டு அத்துமீறியதாகக் (Sexual Abuse) கூறப்படுகிறது. பள்ளியின் கழிவறையில் நடந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் குறித்து இரு குழந்தைகளும் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இது பற்றி பெற்றோரும், அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலரும் பத்லாப்பூர் கிழக்கு காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தனர்.

பள்ளி பணியாளர்கள் கைது: காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது 11 மணி நேரம் காத்திருக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பத்லாபூர் முழுவதும் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் பள்ளி பணியாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த சம்பந்தப்பட்ட பள்ளியில் உள்ள பொருட்களையும் போராட்டக்காரர்கள் சூறையாடினர். மேலும் ரயில்களை மறித்து (Badlapur station) போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் கடந்த மாதம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

இயற்கைக்கு மாறான பாலியல் வழக்கு: அதன் பிறகு அதே பள்ளியில் துப்புரவு பணியில் ஈடுப்பட்டு வந்த அக்ஷய் ஷிண்டே (வயது 23) எனும் நபர் தான் சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்து அவனை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் மூன்று முறை திருமணம் செய்து கொண்ட அக்ஷய் ஷிண்டேவின் இரண்டாவது மனைவியான 21 வயதுடைய பெண் ஒருவர் போயசர் காவல்துறையை அணுகி அவர் மீது வழக்குப் பதிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். MP Veena Devi's Son Dies: எம்பி வீணாதேவியின் மகன் உயிரிழப்பு.. சாலை விபத்தால் நடந்த கொடூரம்..!

அந்த பெண் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அக்ஷய் ஷிண்டேவை திருமணம் செய்து கொண்டு, அவருடனும் அவரது குடும்பத்தினருடனும் பத்லாபூரில் வசித்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது அவர் தன்னுடன் "இயற்கைக்கு மாறான உடலுறவு" கொள்ளுமாறு வற்புறுத்தியதனால், அந்த பெண் அவரை விட்டு சென்றதாக அவர் காவல்துறையிடம் கூறியுள்ளார். தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம் 377 (இயற்கைக்கு மாறான செக்ஸ்) பிரிவின் கீழ் போயசூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அப்புகாரின் அடிப்படையில் ஷிண்டேயிடம் விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக நேற்று மாலை ஷிண்டேயை காவல்துறை தலோஜா சிறையிலிருந்து காவல்துறை வாகனத்தில் பத்லாபூருக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் சுட்டுக்கொலை: காவல்துறை வாகனம் மும்ப்ரா பைபாஸ் ரோட்டில் வந்தபோது, திடீரென அக்‌ஷய் ஷிண்டே தனது அருகில் அமர்ந்திருந்த காவலரிடம் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கி சரமாரியாகச் சுட ஆரம்பித்தார். இதில் சில காவலர்கள் காயம் அடைந்தனர். உடனே ஆய்வாளர் சஞ்சய் ஷிண்டே தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ஷிண்டே மீது சுட்டார். இத்துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த ஷிண்டே கல்வாவில் உள்ள சத்ரபதி சிவாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்குச் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். அக்‌ஷய் ஷிண்டே துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டு இருப்பதை பத்லாபூர் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இத்துப்பாக்கிச் சூட்டுக்கு மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா சட்டமன்ற உறுப்பினர் ராஜு பாட்டீல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.