Aadi Peruku 2025 (Photo Credit: Team LatestLY)

ஜூலை 28, சென்னை (Festival News): ஆடி மாதத்தில் மிக முக்கியமான பண்டிகையாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு, ஆடி மாதத்தின் 18-ஆம் நாளில் கொண்டாடப்படுகிறது. இதை ஆடி பதினெட்டாம் பெருக்கு (Aadi 18) என்றும் சொல்வர். நீர் நிலைகளுக்கு நன்றி தெரிவித்து, பூஜை செய்து வழிபடும் நாளாக கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு அன்று புதிய தொழில் துவங்குவது, தொழில் விருத்திக்கான முதலீடுகள் செய்வது ஆகியவற்றை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நாளில் எதை துவங்கினாலும் அது பெருகிக் கொண்டே போகும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கு இந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 03ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. Aadi Thiruvathirai 2025: ஆடித் திருவாதிரை விழா: கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை.!

ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுவது ஏன்?

புண்ணிய நதியான கங்கை நதி தன்னுடைய பாவங்களை போக்க கிருஷ்ண பகவானிடம் வழி கேட்டது. கிருஷ்ணர், காவேரி ஆற்றில் கலக்க சொன்னார். அதனால், காவேரி ஆறு விஷ்ணு இருக்கும் இடங்களுக்கு சென்றது. ஸ்ரீரங்கப்பட்டினம், சிவ சமுத்திரம், ஸ்ரீரங்கம் போன்ற இடங்களுக்கு சென்று ரங்கநாதரை வணங்கியது. இந்நிகழ்வு தான் ஆடிப்பெருக்கு (Aadi Perukku) பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவமழை அதிகமாக பொழியும். இதனால் காவேரி ஆற்றில் நிறைய தண்ணீர் பாயும். ஆடி 18இன் முக்கியத்துவத்தை சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் கோலாகல கொண்டாட்டம்:

ஆடி பெருக்கு அன்று, பெண்கள் புது தாலி கயிறு மாற்றி தங்களின் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைப்பதற்காக வேண்டி கொள்வர். அன்றைய தினம் காவேரி ஆற்றுக்கு சென்று பூஜை செய்து வழிபடுவார்கள். இந்நாளில் காவிரியில் புனித நீராடினால் பாவம் நீங்கி, செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம். காவிரி கரைக்கு சென்று வழிபட முடியாதவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு சென்று வழிபடுவது வழக்கம். மக்கள் கிராமங்களில் உள்ள நீர்நிலைகளில் பூஜை செய்து, வழிபடுவது உண்டு.

நல்லநேரமும், வழிபடும் முறையும்:

ஆடிப்பெருக்கு 2025, ஆகஸ்ட் 3ஆம் தேதி வருகிறது. இந்நாளில், காலை 7:44 முதல் 8:20 வரை வாஸ்து நல்ல நேரம் உள்ளது. இந்நேரத்தில் புனித நீராடி, தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. ஆடிப்பெருக்கு அன்று, புனித நீராடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அன்றைய தினம் ஆற்றங்கரைக்கு சென்று தீபம் ஏற்றி வழிபடலாம். திருமணமான பெண்கள் தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளலாம். இந்நாளில் செய்யப்படும் தர்மங்கள் மிகவும் பலன் தரும்.