ASTRO (Photo Credit: Pixabay)

டிசம்பர் 10, சென்னை (Astrology Tips): சிம்ம ராசி மற்றும் கன்னி ராசியில் இருக்கும் உத்திர நட்சத்திரக்காரர்களே (Utthiram), கோச்சாரப்படி கடந்த 10 மாதங்களாகவே மிக சிறப்பான, தொழில் ரீதியான, குடும்ப ரீதியான, பணரீதியான முன்னேற்றங்களை அடைந்திருப்பீர்கள். இந்த நிலை தற்போது மார்ச் முழுவதும் நீடித்தாலும், திடீர் பண நெருக்கடி குடும்பத்தில் சில குழப்பங்கள், உடல் நல குறைவு மற்றும் பேச்சினால், வாக்கினால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு வரும் மார்ச் வரை தொழில் ரீதியான முன்னேற்றம், கூட்டாளிகளால் நன்மை, நண்பர்களால் ஆதாயம், தொழிலில் நல்ல லாபம் கிடைப்பதற்கு யோகம் இருக்கிறது. இருந்தாலும் தற்போது இருந்து ஒரு ஏழு மாதங்களுக்கு சில நெருக்கடிகளும் ஏற்படுவதால் எல்லாமே ஒரு இழுபறிக்கு பின்னரே உங்களுடைய பிரச்சனைகள் நீங்கும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் மார்ச் மாதத்திற்குள் கண்டிப்பாக கிடைக்கும். மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுவதால் உங்கள் கவனம் சிதற கூடாது. உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு, உடல் நலன் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் சாப்பாட்டு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அசைவ உணவு சாப்பிடுபவர்கள், எதிலும் கவனத்தோடு இருக்க வேண்டும். முன்பின் தெரியாத ஹோட்டல்களில் சென்று சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதற்கு யோகம் இருக்கிறது. திடீர் அதிர்ஷ்டங்கள், புண்ணிய ஸ்தல யாத்திரைகள் சென்று வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆனாலும் அதை சில சிரமங்களுக்கு இடையிலேயே நிறைவேற்றுவீர்கள். Astrology: 2025 ஆம் ஆண்டு மகம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

பண நெருக்கடி, கடன் தொல்லை புதிய கடன் பெறுதல், நோய் பாதிப்பு போன்ற விஷயங்கள் முக்கியமாக பிரச்சினையை கொண்டு வரும். மறைமுக எதிரிகளின் தொல்லை இருக்கும். ஜாதகத்தில் திசை புத்தி சரி இல்லாதவர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோயிலுக்கு சென்று சனீஸ்வரர் மற்றும் விநாயகர் ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் ஓரளவு பிரச்சினையை குறைக்கலாம். வசதி வாய்ப்பு உள்ளவர்கள், தான தர்மங்கள், பூஜைகளை செய்வதன் மூலம் தலைக்கு வருவதை தலைப்பாகையோடு போக வைக்கலாம். பொதுவாக உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு வரும் பங்குனி மாதம் முதல் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் தடை, தொழிலில் போட்டிகள், தொழிலில் லாபம் குறைவு, தனியாரில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலை இழப்பு ஏற்படலாம்.

அரசு அதிகாரிகளுக்கு, மேல் அதிகாரிகளிடம் பிரச்சனை, மெமோ, சஸ்பெண்ட் போன்ற விஷயங்களும் மார்ச் மாதத்திற்கு மேல் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. தற்போது முதல் கலை துறையினருக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பது சிரமம். உங்களுக்கு உரிய முழுமையான சம்பளம் நிலுவைத் தொகையிலேயே கிடைக்கும். அரசியல்வாதிகள் வரும் மார்ச் மாதத்திற்கு மேல் கவனமாக இருக்கவும் பதவி பறிபோவது, அதிகாரிகளால், மூத்த அரசியல்வாதிகளால், அதிகாரமிக்கவர்களால் பிரச்சனைகள் தோன்றலாம். பொதுமக்களிடமும் கெட்ட பெயர் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் பொது இடங்களில் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

புரோக்கர் தொழில் செய்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வீணான பெட்ரோல் செலவு, உடல் அசதியும் தான் ஏற்படும். அதனால் திட்டமிட்டு செயல் புரியுங்கள். ரியல் எஸ்டேட் செய்பவர்கள் மார்ச் மாதத்திற்கு மேல் தொழில் மிகவும் மந்தமாக இருக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு பெரிதாக லாபம் கிடைக்காது. உங்கள் ஜாதகரீதியாக திசை புத்திகள் நன்றாக இருந்தால் இதை சமாளித்து வருவீர்கள்.ஜாதகத்தில் திசை புத்திகள் சரியில்லை என்றால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் கெடு பலன்கள் குறையும்.

உங்கள் மதிப்பெண் மார்ச் வரை 70. மார்ச்சுக்கு பிறகு 40