டிசம்பர் 20, சென்னை (Astrology Tips): தனுசு ராசி மற்றும் மகர ராசியில் இருக்கும் உத்திராடம் (Uthiraadam) நட்சத்திரக்காரர்களே, கடந்த 10 மாத காலமாக தொழில் முன்னேற்றம், புதிய வேலை வாய்ப்புகள், பணவரவு,நோய் பாதிப்பில் இருந்து முன்னேற்றம், குடும்பத்தில் மகிழ்ச்சி, வண்டி, வாகனம் வாங்குதல் போன்ற நல்ல பலன்கள் நடைபெற்று வருவதை நீங்கள் அறிவீர்கள். இந்த நன்மையான பலன்கள் மாசி மாதம் வரை நீடிக்கும். அதன் பிறகு எதிலும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். பணம் நெருக்கடி, கடன் தொல்லை குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள், சண்டை, சச்சரவுகள் ஏற்படும். வாக்கிலே சனி என்று கூறுவார்கள் நீங்கள் எதையும் பேசுவதற்கு முன் நன்றாக யோசித்துப் பேச வேண்டும். நீங்கள் இயல்பாக பேசினால் கூட அது வில்லங்கத்தில் வந்து சேரும். எனவே பேச்சில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை, வாகன வகைகளில் வீண் செலவினங்கள் ஏற்படும்.
உத்திராடம் நட்சத்திரகாரர் பலன்கள்:
இதுவரை அனுசரணையாக இருந்து வந்த நண்பர்கள் எதிரிகளாக மாறுவதற்கும், மனக்கசப்பு அடைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. உடல் நலனில் கவனம் தேவை ,வீண் அலைச்சல்களை தவிர்க்க வேண்டும். எதையும் திட்டமிட்டு செயல்படுங்கள். நேரத்திற்கு சாப்பிட கூட முடியாது. சாப்பாட்டில் பிரச்சனைகள் வரும் .வீட்டில் சாப்பிடும் போது சண்டை சச்சரவு வரும். நேரம் தவறி சாப்பிடுவது, நேரம் தவறி உறங்குவது போன்ற பிரச்சனைகளையும் சந்திப்பீர்கள். வரும் கல்வியாண்டில் மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் வீண் பிரச்சனைகள் உங்களைத் தேடி வரும். நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். சஸ்பெண்ட் செய்யப்படுவது பெற்றோரை அழைத்து வரச் சொல்வது, தண்டனை பெறுவது போன்ற பலன்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இப்போது இருந்தே தொழில் ரீதியாக சில பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். புகழ்பெருமை கெடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
மகர ராசியில் இருக்கும் உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் தந்தை வழியில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் அல்லது தந்தையின் உடல்நிலை பாதிக்கலாம் அல்லது அப்பாவிற்கும் உங்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படலாம் அல்லது வீண் சண்டை சச்சரவுகள் வரலாம். ஆசிரியர், குருமார்களின் கோபத்திற்கு ஆளாகலாம். ஆன்மீகப் பயணங்கள் தடைபடுவது கோயில் மற்றும் புனித யாத்திரை செல்ல முடியாமல் கவலைப்படுவது போன்ற பலன்கள் நடைபெறும். தொலைதூரப் பிரயாணங்கள், வெளிநாடு செல்வதை தள்ளிப் போடவும். அதையும் மீறி வெளிநாடு, நீண்ட தூர பிரயாணம் என்றால் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். சென்ற இடத்தில் நீங்கள் எதிர்பார்த்த சூழ்நிலை இருக்காது.
தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் மனைவி குடும்பத்தின் மூலம் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மன தைரியம் குறையும். குழப்பமான சிந்தனைகள் ஏற்படும். வீண் அலைச்சலை கொடுக்கும். தனியார் தொழில் வேலை பார்ப்பவர்கள் வேலை இழப்பு ஏற்படலாம். அதனால் வேலை பார்க்கும் இடத்தில் எந்த ஒரு கருத்தையும் யாரிடமும் எதுவும் பகிர்ந்து கொள்ள கூடாது. சுய தொழில் செய்பவர்களுக்கு தொழில் மந்தமாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்யக்கூடாது. புதிய முயற்சிகள் மார்ச் மாதத்திற்கு மேல் கூடாது. சுயதொழில் செய்பவர்கள், வேலைக்காரர்கள் இருந்தால் அவர்கள் வேலைக்கு சரியாக வரமாட்டார்கள் அல்லது சம்பள உயர்வு கேட்டு பிரச்சினை செய்வார்கள். அரசு அதிகாரிகளுக்கு மேலதிகாரிகளிடம் இணக்கமான சூழ்நிலை இருக்காது. கையூட்டு பெறுவது மேலும் வேலையில் சிரத்தை இல்லாமல் இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு அதற்குரிய பலன் கிடைக்கும்.
பெண்களுக்கு குடும்பத்தில் ஒரு சுமுகமான சூழ்நிலை இருக்காது. வீண் கோபதாபங்கள், சண்டை சச்சரவுகள், உடல்நலம் பாதிப்பு, நகையை அடகு வைப்பது, கொடுக்கல் வாங்கலில் சிக்கல் ,அப்பா வழியில் உறவில் விரிசல் ஏற்படும். நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நண்பர்களால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆதலால் பெண்கள் எந்தப் பிரச்சனையையும் மனதிற்குள் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். வெளியே மனம் விட்டு கூறுகிறேன் என்று நீங்கள் யாரிடமாவது பிரச்சனைகளை கூறினால் அதன் மூலம் வில்லங்கம் ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் அமைவது கடினமே. அப்படியே உங்கள் ஜாதக ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைத்தாலும், கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். வீண் அலைச்சல்களும் சரியான நேரத்தில் திட்டமிடாமல் வீண் செலவினங்களும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எந்த ஒரு புதிய முயற்சியாக இருந்தாலும் உங்கள் ஜாதகத்தை பார்த்து அதில் திசை புத்திகள் நன்றாக இருந்தால் மட்டுமே புதிய முயற்சிகளில் ஈடுபடலாம் .
அப்படியே ஜாதகம் நன்றாக இருந்து, புதிய முயற்சிகளில் ஈடுபட்டாலும் தடைகள், நீண்ட இழுபறிகளுக்கு பிறகு அது வெற்றி அடையும்.திருமண வயதில் இருப்பவர்கள் திருமணம் முடிப்பதாக இருந்தால், வரும் மாசி மாதத்திற்குள் முடிக்க வேண்டும். அதற்கு பிறகு இந்த ஆண்டில் திருமணம் செய்ய வேண்டாம். மீறி திருமணம் செய்தால் கணவன் மனைவியிடையே பிரச்சனை, இரு குடும்பத்தாரிடமும் வீண் சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் வரலாம். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்ற நிலை ஏற்படலாம். வீடு வாங்குதல், வீடு கட்டுதல், இடம் வாங்குவது போன்ற விஷயங்களை மாசி மாதத்திற்குள் முடித்து கொள்ளவும். அரசியல்வாதிகள் எதிலும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். பதவி இழப்பு, மக்களிடம் கெட்ட பெயர் வாங்குவது, வம்பு வழக்குகளை சந்திப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஒரு சிலருக்கு விபத்து, போலீஸ், கோர்ட் கேஸ் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஷேர் மார்க்கெட்டில் ஓரளவு லாபம் உண்டு. கமிஷன், புரோக்கரேஜ் தொழிலில் இருப்பவர்களுக்கு ஓரளவு வருமானம் வர யோகம் இருக்கிறது.
பரிகாரம்:
நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோயிலுக்கு செல்லுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள். வாய்ப்பு உள்ளவர்கள் திருநள்ளாறு சென்று வரலாம். சிவ வழிபாடு சிறப்பான முன்னேற்றத்தை தரும். நவகிரக சனி வழிபாடு நன்மை தரும்
மார்ச் மாதம் வரை உங்கள் மதிப்பெண் 70. மார்ச்சுக்கு பிறகு 40.
இது கோச்சார ரீதியான பலன் மட்டுமே.