Nagasaki Day (Photo Credit: Team LatestLY)

ஆகஸ்ட் 09, நாகசாகி (World News): ஹிரோஷிமா நாகசாகி (Hiroshima Nagasaki) என்றாலே நம் மனதில் தோன்றுவது அழிவு, மரணம், துயரம். இரண்டாம் உலகப் போரின் கொடூர முகத்தை உலகிற்கு காட்டிய நிகழ்வுதான் ஹிரோஷிமா நாகசாகி மீதான அணுகுண்டு தாக்குதல். அந்த கொடூர நிகழ்வு நடந்து 79 ஆண்டுகளாகி உள்ளது. அந்த பேரழிவு ஏற்படுத்திய வடு இன்றும் ஆறாமல் உள்ளது. உலகின் முதல் அணுஆயுத தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜப்பானிய நகரமான நாகசாகி, அணுகுண்டு வீச்சின் 79 வது ஆண்டு நினைவு தினத்தை இன்று அனுசரிக்கிறது.

இரண்டாம் உலகப் போர்: இரண்டாம் உலகப் போர் (World War II), மனித குலத்தின் இருண்ட காலகட்டங்களில் ஒன்று. அப்பாவி மக்கள், குழந்தைகள், முதியவர்கள் என எந்த கரிசனமும் இன்றி மக்களை காவு வாங்கிய போர். இந்தப் போரில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடுகள் தீவிரமான மோதலில் ஈடுபட்டது. அதுமட்டுமில்லாமல் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா அணுகுண்டு தயாரித்தது. செப்டம்பர் 1, 1939 அன்று ஜெர்மனி, போலந்து மீது படையெடுத்த பின்னர் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. International Cat Day 2024: "எகிப்தில் கடவுள்.. உண்மையில் ராஜா.." சர்வதேச பூனைகள் தினம்..!

அணுகுண்டு தாக்குதல்: போரில், டிசம்பர் 7, 1941 அன்று ஹவாயில் உள்ள பேர்ல் ஹார்பரில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தின் மீது ஜப்பானிய இராணுவம் திடீர் தாக்குதலை நடத்தியதை அடுத்து, அமெரிக்கா, ஜப்பான் மீது ஒரு போரை அறிவித்தது. தொடர்ந்து 1945-ல் இதே நாளில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரம் மீது ‘லிட்டில் பாய்’ எனும் அணுகுண்டை அமெரிக்கா வீசியது தான். ஒரு நொடியில் நகரமே சாம்பலானது. ஹிரோஷிமாவில் மட்டும் 1.40 லட்சம் மக்களின் உயிரை பறித்தது. போர்க்களத்தில் முதல் முறையாக அணுகுண்டு பயன்படுத்தப்பட்டது அப்போது தான். ஆகஸ்ட் 9 அன்று நாகசாகி மீது மற்றொரு குண்டு வீசப்பட்டது. இந்த அணுகுண்டு வெடிப்பில் சுமார் ஒரு லட்சம் பேர் மடிந்தனர். நாகசாகி நகரத்தின் மீது போடப்பட்ட அணுகுண்டிற்கு `குண்டு மனிதன்’ (FAT MAN) என்று பெயர் சூட்டினர். ஒரு வாரம் கழித்து ஆகஸ்ட் 15 அன்று ஜப்பான் சரணடைந்தது, இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

பேரழிவின் விளைவுகள்: குண்டு விழுந்த இடத்திலிருந்து சுமார் 280 மீட்டர் சுற்றளவுக்குள் இருந்த அனைத்தும் ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் சாம்பலாகி இருந்தன. வீசப்பட்டது அணுகுண்டு என்பதே குண்டு வீசப்பட்ட 16 மணி நேரத்துக்கு பின்னர் தான் தெரிந்தது. அணுகுண்டிலிருந்து வெளிப்பட்ட வெப்பத்தின் அளவு 3 லட்சம் டிகிரி செல்சியஸ். கட்டங்கள் தரைமட்டமாயின. அணுகுண்டினால் ஏற்பட்ட கதிர்வீச்சு பாதிப்பு மனிதகுலத்தின் பேரழிவானது. கதிர்வீச்சினால் பல தலைமுறையினர் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் உலக நாடுகளை அச்சுறுத்தியது.

நாகசாகி இன்று: நாகசாகி இன்று, ஒரு நினைவுச் சின்னமாகத் திகழ்கிறது. அணு ஆயுதங்களின் கொடுமைகளை உலகிற்கு நினைவுபடுத்தும் வகையிலும், அமைதிக்கான ஒரு அடையாளமாகவும் விளங்குகிறது.