அக்டோபர் 18, புதுடெல்லி (Agriculture Tips): கால்நடை வளர்ப்பில் பசுந்தீவனம் முக்கியமானது. இந்த தீவனங்கள் எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை. இதில் உள்ள உயிர்சத்துக்கள் மற்றும் தாது உப்புகள் பால் உற்பத்தியைப் பெருக்க உதவுகின்றன. கோ. எப்.எஸ். 29 , மக்காச் சோளம், நேப்பியர் புல், கினியா புல், கொழுக்கட்டைப் புல், வேலி மசால், குதிரை மசால், தட்டைப்பயிறு ஆகியவை மூலம் பசுந்தீவனத்தை பெற முடியும். பசுந்தீவனங்களை அதன் இயல்பு மாறாமல், குறைந்த சத்து இழப்புடன் பதப்படுத்தி சேமிக்கும் ஊறுகாய்புல். பசுந்தீவனங்கள் அதிகமாக கிடைக்கும் காலங்களில் தேவைக்கு போக மீதம் இருப்பவற்றைப் பதப்படுத்தி, அவற்றை கோடைக்காலங்களில் பயன்படுத்த இது ஒரு சிறந்த வழிமுறையாகும் .
ஊறுகாய் புல் தயாரிக்கும் முறை:
- மக்காசோளம், சோளம், கரும்பு தோகை, கம்பு, CO-3 மற்றும் CO-4 ஆகியவை ஊறுகாய் புல் தயாரிக்க ஏற்றவையாகும்.
- ஊறுகாய் புல் குழி - மேட்டுப்பாங்கான இடத்தில் மழை நீர் மற்றும் காற்று புகாவண்ணம் அமைக்கப்பட வேண்டும். 1 மீ x 1மீ x 1மீ அளவு குழியில் 500 கிலோ தீவனப்பயிரை சேமிக்கலாம்.
- சர்க்கரை பாகு (4% ), அசிடிக் அமிலம் (அ) சிட்ரிக் அமிலம் (1%), தவிடு (அ) சோளம் (அ) கம்பு (அ) மக்காசோளம் (5%), சுண்ணாம்புத்தூள் (1%) ஆகியவற்றை பதப்படுத்துவதற்காக தீவனக்குழியில் சேர்க்க வேண்டும்.
- பசுந்தீவனப் பயிர்களை பூ பூக்கும் தருணத்தில் அறுவடை செய்து, ஈரப்பதம் 60 விழுக்காடு வரும் வரை 3 முதல் 5 மணிநேரம் வயலில் அப்படியே போட்டு உலர்த்த வேண்டும்.
- ஊறுகாய் புல் குழியில் முதலில் வைக்கோலை சிறிதளவு பரப்பி விடவேண்டும்.
- பசுந்தீவனப் பயிர்களை சிறு துண்டுகளாக நறுக்கி குழியில் இடவேண்டும். ஒவ்வொரு 2 அடிக்கும் நன்றாக மிதித்து, காற்றை வெளியேற்றி விடவேண்டும். Chettinad Vazhakkai Varuval Recipe: செட்டிநாடு ஸ்டைலில் வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
ஊறுகாய் புல் தயாரித்தல்:
ஒவ்வொரு 2 அடிக்கும் பதப்படுத்த தேவையான பொருட்களை சரியான அளவில் நன்றாக சேர்க்கவேண்டும். நிலமட்டத்திற்கு மேல் 5 - 6 அடி உயரம் வரை நிரப்பிய பின், பாலித்தீன் கொண்டு மூடி விடவேண்டும். இதன் மேல் சாணம் மற்றும் மண் கொண்டு காற்று புகாவண்ணம் பூசி மொழுகவேண்டும். இவற்றில் வெடிப்பு ஏற்பட்டால் சேறு அல்லது சாணம் கொண்டு பூசி காற்று உள்ளே புகுவதை தடுக்கவேண்டும். இல்லாவிட்டால் ஊறுகாய் புல் தீவனம் கெட்டுவிடும்.
2 மாத காலத்தில் ஊறுகாய் புல் தீவனம் உபயோகத்திற்கு தயாராகிவிடும். தேவையானதை குழியின் ஒரு பகுதியிலிருந்து எடுக்கவேண்டும். ஒரு முறை குழியினை திறந்து விட்டால் எவ்வளவு விரைவில் உபயோகப்படுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே செல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
ஊறுகாய் புல்லின் நன்மைகள்:
- முற்றிபோன, தடிமனான தண்டுடைய தீவனப்பயிர்களை இந்த வழிமுறையில் பதப்படுத்தி, அவற்றின் தரத்தை உயர்த்தலாம். கால்நடைகள் இவற்றை வீணாக்காமல் உண்ணும்.
- இதில் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதால் பசுந்தீவனத்தின் தன்மை மற்றும் சத்துகள் மாறுவதில்லை.
- பசுந்தீவனம் கிடைக்காத கோடைக்காலங்களில் ஊறுகாய் புல்லை கால்நடைகளுக்கு அளித்து, ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் பராமரிக்கலாம்.
- தீவனப்பயிருடன் உள்ள களை விதைகள் இம்முறையில் அழிந்துவிடும். ஊறுகாய் புல் மூன்று ஆண்டுகள் வரை கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும்.