ஜூலை 31, சென்னை (Kitchen Tips): முள்ளங்கியில் (Radish) பல அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன. அவற்றை நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், பலருக்கும் இந்த முள்ளங்கியின் வாடை பிடிக்காது. அதனால் அந்த முள்ளங்கியை பெரும்பாலானோர் உணவில் சேர்த்துக்கொள்வதை தவிர்த்துவிடுகின்றனர். அப்படிப்பட்டவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் முள்ளங்கியை வைத்து சுவையான முள்ளங்கி போண்டா (Mullangi Bonda) எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
முள்ளங்கி - 1
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 5 பல்
இஞ்சி - அரை இன்ச்
கடலை மாவு - அரை கப்
தோசை மாவு - 2 மேசைக்கரண்டி
சீரகத்தூள், பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
சோள மாவு - ஒரு மேசைக்கரண்டி
கருவேப்பிலை, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
உப்பு - தேவையான அளவு. Amla Juice Recipe: ஆரோக்கியத்திற்கு அற்புதம் செய்யும் அரை நெல்லிக்காய் ஜூஸ் செய்வது எப்படி? விபரம் உள்ளே!
செய்முறை:
முதலில் முள்ளங்கியின் தோலை சீவிவிட்டு அதை தண்ணீரில் கழுவி கேரட் உரசுவது போல் உரசிக் கொள்ளவும். பின் துருவி வைத்துள்ள முள்ளங்கியை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பிறகு இதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்க்கவும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் இவற்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். துருவிய இஞ்சி மற்றும் இடித்த பூண்டு ஆகியவற்றை சேர்க்கவும்.
அடுத்து இதனுடன் கடலை மாவு, மிளகாய்த்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள், சோள மாவு, தேவையான அளவு உப்பு, தோசை மாவு போன்றவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக பிணைந்துகொள்ள வேண்டும்.
முள்ளங்கியில் ஏற்கனவே தண்ணீர் சத்து அதிகம் இருக்கும். இதனால் தண்ணீர் ஊற்ற கூடாது. இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணைய் ஊற்றி சூடேற்றவும், சூடானதும் மிதமான சூட்டில் அடுப்பை வைத்து சிறு சிறு போண்டாவாக அதில் போட வேண்டும்.
இந்த போண்டா நன்றாக சிவந்து வெந்த பிறகு இதை திருப்பி போட்டு எடுத்து விடவும். அவ்வளவுதான் சுவையான முள்ளங்கி போண்டா ரெடி.