ஆகஸ்ட் 21, சென்னை (Kitchen Tips): நாம் வெளியில் பயணம் செல்லும்போது பேக்கரியில் டீ, பப்ஸ் வாங்கி சாப்பிடுவோம். அதுவும் முட்டை பப்ஸ் அடிக்கடி வாங்கி சாப்பிடும் பழக்கம் பலபேரிடம் உள்ளது. அந்தவகையில், வீட்டிலேயே எளிமையான முறையில் முட்டை பப்ஸ் (Egg Puffs) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - கால் கிலோ
முட்டை - 6
வெங்காயம் - 1
நெய் - 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
எலுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி
கரம்மசாலா - 1 தேக்கரண்டி
மிளகாய்தூள் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
உப்பு - தேவையான அளவு. Fish Pepper Masala Recipe: காரசாரமான மீன் மிளகு மசாலா செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
செய்முறை:
முதலில் மைதா மாவுடன் தேவையான அளவு உப்பு மற்றும் நெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பிறகு அதில் எலுமிச்சை சாறு சேர்த்து, தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி பூரி மாவு பதத்திற்கு நைசாக பிசைந்து 10 நிமிடம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
பிறகு அதனை வெளியில் எடுத்து பூரிக் கட்டையில் தேய்க்கவும். பின் நெய்யை தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியின் மேல் தடவி நான்காக மடித்து அதை அதி குளிர்சாதனப் பெட்டியில் சுமார் 10 நிமிடம் வைக்க வேண்டும்.
எல்லா மாவையும் இதேபோல் செய்து வைக்கவும். அடுத்து ரொட்டியை தேய்த்து நெய்யை தடவி மடித்து சமமாக தேய்த்து செவ்வகங்களாக துண்டுகள் போடவும். முட்டைகளை வேகவைத்து தோலுரித்து இரண்டாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி வைக்கவும்.
பிறகு பப்ஸ் துண்டுகளில் முட்டை துண்டினை ஒருபுறம் வைத்து, அதனுடன் வதக்கிய கலவையை சேர்த்து வைத்து மறுபுறத்தை மூட வேண்டும்.
இதனை அவனில் வைக்ககூடிய தட்டில் பப்ஸ்ஸை பரப்பி வைத்து அவனை 400 டிகிரி சூடாக்கி, சுமார் அரைமணி நேரம் வைக்கவும். பிறகு அவனின் வெப்பத்தை பாதியாக குறைத்து வைத்து 10 நிமிடம் வைக்க வேண்டும். பப்ஸ் நன்கு வெந்து பொன்னிறமாக வந்தவுடன் வெளியில் எடுத்து பரிமாறவும். சுவையான முட்டை பப்ஸ் ரெடி.