ஜனவரி 15, சென்னை (Kitchen Tips): வீட்டில் முக்கியமான விசேஷ நாட்களில் சிக்கன், மட்டன் செய்வது வழக்கம். அந்தவகையில், மட்டன் வைத்து சுவையான பிரியாணி செய்யலாம். இது வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். அப்படிப்பட்ட சுவையான மட்டன் பிரியாணி (Mutton Biryani) எப்படி செய்வது என்பதனை இப்பதிவில் பார்ப்போம். Mutton Biryani Recipe: முனியாண்டி விலாஸ் மட்டன் பிரியாணி செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
மட்டன் - அரை கிலோ
பாசுமதி அரிசி - 300 கிராம்
பெரிய தக்காளி - 2 (நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
தயிர் - 2 மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 மேசைக்கரண்டி
எலுமிச்சை - 1
கொத்தமல்லி - 1 கைப்பிடி அளவு
புதினா - 1 கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் - 6
கிராம்பு - 6
ஏலக்காய் - 4
பட்டை - 3 துண்டு
பிரியாணி இலை - 3
அன்னாசிப்பூ - 2
மிளகாய் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் பாசுமதி அரிசியை நீரில் நன்கு கழுவி விட்டு, 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 4 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பின், அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்பு, அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, அடுத்து அதில் தயிரை சேர்த்து கிளறி விட வேண்டும். பின் தக்காளியை சேர்த்து ஒருமுறை வதக்கி விடவும்.
- அதன் பின் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து கிளறி விட வேண்டும். பின், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
- பிறகு, அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு கிளறி விட்டு, பின் எலுமிச்சை சாற்றினை சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து, பின் முக்கால் டம்ளர் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
- ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சாதத்தை வடிக்க தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 2 பிரியாணி இலை, 3 கிராம்பு, 1 துண்டு பட்டை, சிறிது புதினா சேர்த்து, அதன் பின் ஊற வைத்த அரிசியை அப்படியே சேர்த்து, சாதத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து, 10 நிமிடம் சாதத்தை வேகவைக்க வேண்டும்.
- அதன்பிறகு, சாதத்தில் உள்ள நீரை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வடிகட்டிய நீரை கீழே ஊற்றி விட வேண்டாம். அதைக் கொண்டு தம் போடவும். நீரை வடிகட்டிய பின், குக்கரில் உள்ள மட்டனை அப்படியே சாதத்துடன் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
- பின் அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து, அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து, காற்று புகாதவாறு ஒரு தட்டு கொண்டு மூடி, அதன் மேல் அரிசி வடிகட்டிய நீர் பாத்திரத்தை வைத்து, குறைவான சூட்டில் வைத்து 20 நிமிடம் தம் போட்டு இறக்கினால், சுவையான மட்டன் பிரியாணி ரெடி.