ஆகஸ்ட் 20, சென்னை (Festival News): முழு முதற்கடவுளான விநாயகப் பெருமானை வழிபடுவதற்குரிய திதி மஹா சங்கடஹர சதுர்த்தி (Maha Sankatahara Chaturthi) ஆகும். வளர்பிறை, தேய்பிறை என மாதத்திற்கு 2 முறை சதுர்த்தி திதி வரும். இதில் ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என வழிபடுகின்றோம். விநாயகப் பெருமான் (Vinayagar) அவதரித்த ஆவணி மாத வளர்பிறை சதுர்த்திக்கு முன்பு தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தியை மஹா சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். புதிதாக சங்கடஹர சதுர்த்தி விரதம் இருக்க துவங்குபவர்கள் மஹா சங்கடஹர சதுர்த்தியில் தங்களின் விரதத்தை துவங்கலாம்.
மஹா சங்கடஹர சதுர்த்தி:
இந்த 2024-ஆம் ஆண்டு மஹா சங்கடஹர சதுர்த்தி வருகின்ற ஆகஸ்ட் 22-ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது. அன்றைய தினம் மாலை 06.14 மணிக்கு பிறகே சதுர்த்தி திதி துவங்குகிறது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி பகல் 03.48 வரை மட்டுமே சதுர்த்தி திதி உள்ளது. இதனால், ஆகஸ்ட் 22-ஆம் தேதி மஹா சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டினையும், விநாயகர் வழிபாட்டினையும் மேற்கொள்ளலாம். விநாயகரை வழிபட்ட பிறகு, சந்திரனை தரிசனம் செய்த பிறகு தான், சங்கடஹர சதுர்த்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பது வழக்கம். World Mosquito Day 2024: "இந்த கொசு தொல்லை தாங்க முடியலப்பா.." உலக கொசு தினம்..!
விரத முறை:
மஹா சங்கடஹர சதுர்த்திக்கு முந்தைய நாள் வீட்டை சுத்தம் செய்து விட வேண்டும். அதிகாலையில் எழுந்து பூஜை அறையில் உள்ள விநாயகரை அலங்கரித்து, அருகம்புல் சாத்தி, விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும். அன்று முழுவதும் முழு விரதம் இருக்க முடிந்தவர்கள் இருக்கலாம். முடியாதவர்கள் பால்,பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். பின், மாலையில் வீட்டிலோ அல்லது விநாயகர் கோவிலுக்கு சென்றோ விநாயகரை வழிபடலாம்.
வழிபடும் முறை:
விநாயகருக்கு விருப்பமான சுண்டல், கொழுக்கட்டை, மோதகம், பிள்ளையார் உருண்டை போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபாடுகளை செய்யலாம். இதனை பூஜை முடிந்த பிறகு அதை வீட்டின் அருகில் இருக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். கோவிலுக்கு எடுத்துச் சென்று அங்கு வருபவர்களுக்கு பிரசாதமாக வழங்கலாம். அன்றைய தினம் விநாயகருக்கு உரிய விநாயகர் அகவல், விநாயகர் அஷ்டகம், விநாயகர் அஷ்டோத்திரம் போன்ற மந்திரங்களை சொல்லி வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். World Photography Day 2024: உலக புகைப்பட தினம்.. வரலாறு என்ன தெரியுமா?!
பலன்கள்:
விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து வழிபடுவதால் நவகிரக தோஷங்கள், நவகிரகங்களால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். சனி தோஷம், ராகு-கேது தோஷம், ஷர்ப தோஷத்தால் திருமணம் போன்றவற்றில் தடை உள்ளவர்கள் மஹா சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடித்தால் சிறந்த பலன் கிடைக்கும். மேலும், விநாயகருக்கு மாலை வாங்கி போட்டு, அந்த மாலையை வாங்கி வந்து வீட்டின் நிலைப்படியில் மாட்டி வைத்தால் வீடு வாங்க முடியாமல் தவிப்பவர்கள், வீட்டில் பல்வேறு பிரச்சனைகளை சந்திப்பவர்கள் ஆகியோருக்கு நல்ல தீர்வு கிடைக்கும். விநாயகருக்கு அணிவிக்கப்படும் அருகம்புல்லை வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபடுவதால் தீய சக்திகளால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து விடுபடலாம்.