Margazhi Month 2024 (Photo Credit: Team LatestLY)

டிசம்பர் 16, சென்னை (Festival News): தமிழ் மாதங்களில் மிக முக்கிய மாதமாகவும், மோட்சத்தை தரும் மாதமாகவும், பாவங்கள் அனைத்தும் நீங்கி, இன்பமான வாழ்க்கையை பெறுவதற்கும், இறை வழிபாட்டிற்குரிய மிகச்சிறப்பான மாதங்களில் ஒன்று மார்கழி மாதம் (Margazhi Month). இந்த மாதத்தில் சிவ பெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம், பெருமாளுக்குரிய வைகுண்ட ஏகாதசி, அனுமனின் திருஅவதார தினம் போன்றவை வருவதால் இது அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு ஏற்ற மாதமாக கருதப்படுகிறது. தேவர்களுடைய விடியற்காலை என கருதப்படும் மார்கழி மாதம் வழிபாட்டிற்குரிய மாதமாகும். Astrology: 2025 ஆம் ஆண்டு விசாகம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!

மார்கழி மாதம் 2024:

மகத்துவம் நிறைந்த மார்கழி மாதத்தில் இறைவனிடம் அவர் திருவடிச் சார்ந்த செயல்பாடுகளிலே மனம் இருக்க வேண்டும். மார்கழியில் சுப நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதேநேரம் இறைவனிடம் மனம் நெருங்கி இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆண்டாள் இம்மாதம் முழுவதும் விரதம் இருந்துதான் பெருமாளை கணவனாக அடையும் பெருமையைப் பெற்றாள். இந்த மாதத்தில் சில குறிப்பிட்ட பயணங்களை மேற்கொள்வதால் சூரியனின் அருளையும், பொருளாதார பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கான வழியையும் பெற முடியும்.

மார்கழி மாத சிறப்புகள்:

  • மார்கழியில் அதிகாலை எழுந்து குளித்துவிட்டு, வாசல் தெளிப்பது மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். மார்கழி மாதத்தில்தான் சிவனுக்காக திருவாதிரை திருவிழா வருகிறது. சிவபெருமானின் பக்தைகள் நோன்பு நோற்பதற்காக தோழியை எழுப்பச் செல்லும் காட்சி திருவெம்பாவையிலும் இடம்பெறுகிறது.
  • மார்கழி மாதம் அதிகாலை வேளையில் நடைபெறும் வழிபாடுகளில் பஜனை மிக முக்கியமானது. தொன்று தொட்டு நடைபெறும் இந்தச் சம்பிரதாய பஜனை மிகவும் சிறப்பானது ஆகும். இதில் மிருதங்கம், வயலின், ஹார்மோனியம், கஞ்சிரா, புல்லாங்குழல், மோர்சிங் போன்ற வாத்தியங்கள் இசைக்கப்படும்.
  • அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வாசலில் கோலம் போடுவது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவதும் நடைபெறும். பசுஞ்சாண உருண்டையில் பூசணி பூவை செருகி கோலத்துக்கு நடுவே வைப்பது மார்கழி முழுக்கவே கடைபிடிக்கப்படுகிறது.
  • பெண்கள் அதிகாலையில் நீராடி பாவை நோன்பு இருந்து, பெருமாளை வணங்கி திருப்பாவை பாடுகின்றனர். அந்தக் கண்ணனே தங்களுக்கு கணவனாக வரவேண்டும் என்பதே கனவாக உள்ளது.
  • ஆண்டாளின் திருப்பாவையை பாடுவது மார்கழி மாதத்தில் ஒரு முக்கியமான சிறப்பம்சமாகும். திருப்பாவை முப்பது பாடல்களைக் கொண்டிருக்கிறது நாள் ஒன்றுக்கு ஒரு பாடல் வீதம் மார்கழி மாதத்தில் முப்பது நாட்களும் திருப்பாவையை மக்கள் பாடி வருகின்றனர்.
  • திருப்பதியில் காலையில் வழக்கமாகப் பாடப்படும் சுப்ரபாததிற்குப் பதிலாக, மார்கழி மாதம் முழுவதும் காலையில் திருப்பாவை (Tiruppavai) பாடப்படுகிறது.
  • சிறப்புகள் பல வாய்ந்த மார்கழி மாத விடியற்காலையில் நாமும் திருப்பாவை, திருவெம்பாவை (Tiruvempavai) பாடல்களைப் பாடி, வணங்கி இறைவனின் அருளைப் பெற முயல்வோம்.