செப்டம்பர் 17, சென்னை (Festival News): அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்திற்கு பின் பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் (Purattasi Month) தமிழ் மாதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் மற்றும் வழிபாடு முறைகள் முக்கியத்துவம் பெறுகிறது. இந்துமத புராணங்களின்படி புண்ணியத்தை அள்ளித் தரும் புரட்டாசி மாதத்தில் பெருமாளை நினைத்து விரதம் இருப்பது நன்மைகளை அள்ளித் தரும் என்றும் கூறப்படுகிறது. Agarbatti Dangers: உயிருக்கு உலை வைக்கும் ஊதுபத்தி.. நிபுணர்கள் எச்சரிக்கை.!
புரட்டாசி மாத சிறப்புகள் :
இந்த மாதத்தில் பெருமாளை வணங்கி விரதமிருக்க அந்த வருடம் முழுவதும் செல்வம், நல்வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். இந்த செய்தித்தொகுப்பில் புரட்டாசி மாத விரதம் குறித்து விரிவாக காணலாம். புரட்டாசி மாதத்தில் அசைவ உணவை நாம் அறவே மறப்பது நல்லது. இந்த மாதத்தில் பயபக்தியுடன் பெருமாளை வேண்டுவது முன்னேற்றத்தை தரும். புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமையில் (Purattasi Saturday Fasting) பெருமாளை நினைத்து வீட்டில் வழிபாடு செய்வது நல்லது. துளசி மாலை இட்டு பெருமாளை நினைத்து வணங்கி வர நமது வாழ்க்கை மேம்படும் என்றும் பெரியோர்கள் சொல்வார்கள்.
விஷ்ணு பகவானை போற்றும் புரட்டாசி :
வாழை இலையில் புளிசாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வடை, சுண்டல், பாயாசம் போன்றவற்றை வைத்து வழிபடலாம். பூஜையில் கட்டாயம் துளசி தீர்த்தம் என்பது இடம்பெற்று இருக்க வேண்டும். மாவிளக்கு, தேங்காய் உடைத்து பூஜை செய்து கோவிந்தா நாமம் உச்சரிப்பதும் முன்னேற்றத்தை தரும். வீட்டில் விரதம் இருப்போர் அன்றைய நாளின் விரதத்தை எமகண்டம் தொடங்குவதற்குள் பூஜையுடன் முடித்துக் கொள்வது நல்லது. காக்கைக்கு இலையில் உணவு வைத்து பின் உணவு சாப்பிடலாம். விரதம் முடிந்த பின்னர் மாலை நேரத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று வருவதும் சிறப்பை தரும்.
புரட்டாசி விரதம் மற்றும் பலன்கள் :
புனிதமான புரட்டாசி மாதத்தில் புண்ணிய பலன்களைப் பெற சில முக்கிய விரதங்கள் (Purattasi Fasting Benefits) குறித்து விரிவாக பார்க்கலாம்.
சித்தி விநாயகர் விரதம் :
வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரை வழிபட்டு விரதம் இருத்தல் வேண்டும். இந்நாளில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, அருகம்புல் வைத்து சுண்டல், பொங்கல் உள்ளிட்ட நெய்வேத்தியங்களுடன் விரதம் இருந்து வழிபடுவதால் தடைகள் நீங்கி காரிய சித்தி உண்டாகும்.
சஷ்டி லலிதா விரதம் :
புரட்டாசி மாதத்தின் வளர்பிறை சஷ்டியில் அம்பாளை வேண்டி மனமுருகி விரதம் இருந்து பூஜை செய்வதால் மங்களமும், ஆரோக்கியமும் பெருகும்.
ஜேஷ்டா விரதம் :
வளர்பிறை அஷ்டமியில் சிவனையும், விநாயகரையும் விரதம் இருந்து வழிபடுவது குடும்பம் செழிக்க உதவும். அருகம்புல் வைத்து வழிபடுவது சிறப்பு.
மகாலட்சுமி விரதம் :
வளர்பிறை அஷ்டமி தொடங்கி 16 நாட்களுக்கு லட்சுமி பூஜை செய்வதால் வறுமை நீங்கி வளம் பெருகும் என்பது நம்பிக்கையாகும்.
அனந்த விரதம் :
புரட்டாசி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தியில் அனந்த பட்மநாப சுவாமியை விரதமிருந்து வழிபடுவது நல்லது. இதன் மூலம் தீராத வினைகள் நீங்கி ஐஸ்வர்யம் கிடைக்கும்.
அமுக்தாபரண விரதம் :
வளர்பிறை சப்தமியில் உமா - மகேஸ்வரரை விரதம் இருந்து வழிபடுவது சகல சௌபாக்கியங்களையும் பெற உதவி புரியும். இதனை செய்வதன் மூலம் வருங்கால சந்ததியும் செழிப்புடன் வாழ இயலும்.
கபிலா சஷ்டி விரதம் :
புரட்டாசி மாதத்தின் தேய்பிறை சஷ்டியில் பசுவையும், சூரியனையும் விரதம் இருந்து வழிபடுவது நல்லது.
மகாளய பட்சம் :
புரட்டாசி மாதத்தின் தேய்பிறையில் கடைபிடிக்கப்படும் மகாளய பட்சம் என்பது முன்னோர்களுக்கான காலமாக கருதப்படுகிறது. பித்ருலோகத்தில் இருந்து முன்னோர்கள் பூலோகத்திற்கு வந்து நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்பது ஐதீகம். அன்றைய தினத்தில் முன்னோர்களை வணங்கி வழிபடுவது பித்ருக்கள் திருப்தி அடைந்து குடும்ப செழிக்க உதவும்.
திருவோண விரதம் :
புரட்டாசி மாதத்தின் திருவோண நட்சத்திரத்தில் கடைபிடிக்கப்படும் திருவோண விரதத்தின் மூலம் விஷ்ணுவின் பரிபூரண அருளை பெறலாம். விரதம் இருப்பவர்கள் முதல் நாள் உணவு உண்ணாமல் திருவோண விரத நாளன்று காலையிலேயே குளித்துவிட்டு பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவர். காலையில் துளசி தீர்த்தம் மட்டும் குடித்துவிட்டு பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை செலுத்தி வழிபடுவதால் விஷ்ணுவின் அருள் கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. விரதம் இருப்பவர்கள் மதிய உணவில் உப்பு சேர்க்காமல் சாப்பிடுவதும் வழக்கம்.