ஜூலை 03, மகாராஷ்டிரா (Maharashtra News): நம் வீட்டில் சமைக்கப்படும் உணவுகளைப் போல வெளியில் சாப்பிடும் அனைத்து உணவுகளும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு தான் சாப்பிடுகிறோம். ஆனால் சமீப காலமாக உணவுப் பொருட்களில் எதிர்பாராத அதிர்ச்சி தரும் பொருட்கள், புழு, பூரான், எலி என கண்டுபிடிக்கப்படுவது வேதனை அளிக்கும் ஒன்றாக உள்ளது. சமீபத்தில், லேஸ் பாக்கெட்டுகளில் கரப்பான் பூச்சி கண்டறியப்பட்டது. வேஃபர்ஸ் பாக்கெட்டில் ஒரு பொரித்த தவளை கண்டறியப்பட்டது. மேலும் ஒரு குடும்பத்தினர் வாங்கிய ஹேர்ஷேஸ் சாக்லேட் சிரப் பாட்டிலில் இறந்த எலியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதுமட்டுமின்றி மலாட்டைச் சேர்ந்த 26 வயது மருத்துவர், ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீமில் மனித கட்டைவிரலைக் கண்டுபிடித்தார்.
ஊட்டச்சத்து தானியத்தில் கிடந்த பாம்பு: அந்தவகையில் தற்போது மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிர அரசு பல ஆண்டுகளாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் ஆறு மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவை வழங்கி வருகிறது. இதில் கோதுமை, அரிசி, பருப்பு, உப்பு மற்றும் பல்வேறு வகையான பருப்பு வகைகள் இருக்கும். இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள சாங்லி மாவட்டத்தின் பலுஸ் தாலுகாவில், கிரிஷி நகர் அங்கன்வாடி எண் 116-ல் உள்ள ராணுவ வீரர் சுபாஷ் நிவ்ரித்தி ஜாதவ், தனது வீட்டுக்கு இதனை வாங்கி சென்றுள்ளார். Traffic Diversions In Madurai: மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றங்கள்.. கோரிப்பாளையம் வழியாக செல்வபர்களுக்கான அறிவிப்பு..!
வீட்டில் அந்த பையை திறந்து பார்த்தபோது, அதில் சிறிய பாம்பு இருந்துள்ளது. அதனைப் பார்த்து அதிர்ந்த அவர்கள், உடனடியாக அங்கன்வாடி ஊழியரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அங்கன்வாடி சேவகர், மாநில அங்கன்வாடி பணியாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆனந்தி போசலேவிடம் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின், ராணுவ வீரர் சுபாஷ் நிவ்ரித்தியை தொடர்பு கொண்டு, அந்த பை திரும்ப பெறப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.