
ஜூலை 02, திண்டுக்கல் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி தொடங்கியது. நடப்பு தொடரின், முதல் சுற்று லீக் ஆட்டங்கள் கோவையிலும், 2வது சுற்று லீக் ஆட்டங்கள் சேலத்திலும், 3வது சுற்று லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியிலும் நடைபெற்று முடிந்தன. தொடரில், 28 லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோழஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. இப்போட்டிகள், அனைத்தும் திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. DD Vs TGC Eliminator: சுழல் ஜாலம் காட்டிய அஸ்வின், வருண் சக்கரவர்த்தி.. திண்டுக்கல் வெற்றிக்கு 141 ரன்கள் இலக்கு..!
திண்டுக்கல் டிராகன்ஸ் எதிர் திருச்சி கிராண்ட் சோழஸ் (Dindigul Dragons Vs Trichy Grand Cholas):
இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் 3வது மற்றும் 4வது இடத்தில் உள்ள திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழஸ் (DD Vs TGC) அணிகள் இன்று (ஜூலை 02) எலிமினேட்டர் போட்டியில் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் ரவிசந்திரன் அஸ்வின் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய திருச்சி அணிக்கு தொடக்க வீரர்கள் வசீம் அகமது 36, கேப்டன் ஜெயராமன் சுரேஷ் குமார் 23 ரன்கள் அடித்து அவுட்டாகினர். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜ்குமார் அஸ்வின் சுழலில் சிக்கினார். சற்று அதிரடியாக விளையாடிய ஜாபர் ஜமால் 33 ரன்னில் அவுட்டானார். திருச்சி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 140 ரன்கள் அடித்தது. திண்டுக்கல் அணி சார்பில் அஸ்வின் 3, வருண் சக்கரவர்த்தி மற்றும் பெரியசாமி தலா 2, சசிதரன் ரவிச்சந்திரன் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
திண்டுக்கல் அபார வெற்றி:
இதனையடுத்து களமிறங்கிய திண்டுக்கல் அணி 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி துரத்தியது. ஆரம்பத்தில் ஷிவம் சிங் 16 ரன்னில் நடையை கட்டினார். அடுத்து ஜோடி சேர்ந்த அஸ்வின் - பாபா இந்திரஜித் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். அஸ்வின் அதிரடியாக விளையாடி 83 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இறுதியில், திண்டுக்கல் அணி ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 143 ரன்கள் அடித்தது. இதன்மூலம், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் ஜூலை 04ஆம் தேதி நடைபெறும் 2வது தகுதி சுற்றுப்போட்டியில் விளையாடவுள்ளது.
நேரலை விவரம்:
அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சி (TNPL Live Watching) மற்றும் ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம்.