மே 09, கோவை (Coimbatore News): கோவை மாவட்டம் பொள்ளாச்சி முத்து கவுண்டர் அவன்யுவில் வசித்து வரும் வெங்கட்ராமன் என்பவரின் மனைவி கிட்டம்மாள். இவரது மகள் தேவி மற்றும் பேரன்கள் ரித்திக், ரோஹித் ஆகியோர் பல்லடம் மகாலட்சுமி அவன்யூவில் வசித்து வருகின்றனர். ரோகித் மற்றும் ரித்திக் ஆகியோர் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் (Weightlifting Competition) பங்கேற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், வார இறுதி நாட்களில் பாட்டி கிட்டம்மாள் பல்லடத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வரும்போது தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை கண்டு தானும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஆசைபட்டுள்ளார்.

இரண்டு பேரன்களின் உதவியால் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் தொடர்ச்சியாக உடற்பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில் பேரன்களோடு உடற்பயிற்சி கூடத்திற்கும் சென்றுள்ளார். அங்கு 25 நாட்கள் பளு தூக்கும் பயிற்சி மேற்கொண்டுள்ளார். பாட்டியின் ஆர்வத்தைக் கண்டு உடற்பயிற்சியாளர் சதீஷ், பாட்டியை கோவையில் கடந்த மே ஒன்றாம் தேதி "Indian fitness federation" சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்த போட்டியில் பெண்களுக்கான பளு தூக்கும் பிரிவில் பங்கேற்ற பாட்டி கிட்டம்மாள் 50 கிலோ எடையை தூக்கி முதல் முயற்சியிலேயே ஐந்தாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார். மேலும் "Strong man of South indian-2024" என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். PM's Economic Advisory Council Report: இந்தியாவில் இந்து மக்கள்தொகையில் வீழ்ச்சி.. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை வெளியீடு..!

இதுகுறித்து பாட்டி கிட்டம்மாளுடன் பேசுகையில், எதையும் துணிச்சலுடன் செய்ய வேண்டும் எனவும், எனது ஆர்வத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் தனது உணவு முறையே காரணம் எனவும், பேரன்கள் மற்றும் உடற்பயிற்சியாளரின் துணையோடு பளு தூக்கும் போட்டியில் பங்கேற்றதாகவும், கம்பங்கூழ், காய்கறி சூப், பேரிச்சம்பழம்,முந்திரி போன்ற உணவு முறைகளை எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் உடற்பயிற்சியாளர் சதீஷ் கூறுகையில் 82 வயதான பாட்டி கிட்டம்மாள் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் அவரது உணவு முறை எனவும் இன்றைய இளைஞர்கள், உணவு முறையை முறையாக கடைப்பிடித்தால் ஆரோக்கியமாக வாழலாம் எனவும் தெரிவித்துள்ளார். 82 வயதிலும் மனம் தளராமல் திறமைக்கு வயது தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பல் தூக்கும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற பாட்டி கிட்டம்மாள் அவர்களுக்கு சமூக வலைதளங்களிலும், உடற்பயிற்சி கூடத்திலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.