Asia Cup 2025 India Vs Sri Lanka (Photo Credit: @TKI_Cricket X)

செப்டம்பர் 27, துபாய் (Sports News): ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) டி20 கிரிக்கெட் தொடர், கடந்த செப்டம்பர் 09ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. இத்தொடர், சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் தகுதிபெற்றன. இதில், ஏற்கனவே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 28ஆம் தேதி துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுவிட்டன. IND Vs SL: இந்தியா அதிரடி பேட்டிங்.. அபிஷேக் சர்மா அதிரடியால் 202 ரன்கள் குவிப்பு..!

இந்தியா எதிர் இலங்கை (India Vs Sri Lanka):

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 26) சூப்பர் 4 சுற்றில் 18வது போட்டியில், இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய இப்போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 202 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 31 பந்தில் 61 ரன்களும், திலக் வர்மா 49*, சஞ்சு சாம்சன் 39 ரன்களும் அடித்தனர். இலங்கை சார்பில் தசுன் ஷனக்க, வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, மஹீஷ் தீக்ஷன, சரித் அசலங்கா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

சமனில் முடிந்த போட்டி:

இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பத்திலேயே குசல் மெண்டிஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதன்பின்னர், பதும் நிஸ்ஸங்க - குசல் பெரேரா இணை அதிரடியாக விளையாடினர். குசல் பெரேரா 58 ரன்கள் அடித்து அவுட்டானார். அடுத்து வந்த சரித் அசலங்கா 5, கமிந்து மெண்டிஸ் 3 ரன்னில் விக்கெட்டை இழந்தனர். மறுபுறம், அதிரடியாக விளையாடி சதமடித்த பதும் நிஸ்ஸங்க 107 ரன்னில் அவுட்டானார். பரபரப்பான இறுதி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 202-5 என போட்டி சமனில் முடிந்தது.

சூப்பர் ஓவர்:

சூப்பர் ஓவரில், இலங்கை அணி முதலில் களமிறங்கியது. முதல் பந்தில் குசல் பெரேரா டக் அவுட்டானார். இலங்கை அணி 5 பந்தில் 2 விக்கெட்டை இழந்து 2 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனையடுத்து, இந்திய அணிக்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ் - சுப்மன் கில் இணை களமிறங்கியது. சூப்பர் ஓவரின் முதல் பந்திலேயே 3 ரன்களை அடித்து இந்தியா வெற்றி பெற்றது.

இந்திய அணி வீரர்கள்:

அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி.

இலங்கை அணி வீரர்கள்:

பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, சரித் அசலங்கா (கேப்டன்), ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனக்க, வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, மஹீஷ் தீக்ஷன, நுவன் துஷார.