செப்டம்பர் 10, துபாய் (Sports News): ஆசிய கோப்பை 2025 (Asia Cup 2025) டி20 தொடர், நேற்று (செப்டம்பர் 09) முதல் தொடங்கி செப்டம்பர் 28ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. குரூப் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் ஆகிய அணிகளும், குரூப் 'பி' பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. 2025 ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை, சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், சோனி லிவ் ஓடிடி தளத்திலும் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. IND Vs UAE: 57 ரன்களுக்கு சுருண்டது யுஏஇ அணி.. இந்தியா அபார பந்துவீச்சு..!
இந்தியா எதிர் ஐக்கிய அரபு அமீரகம் (India Vs United Arab Emirates):
இந்நிலையில், இரண்டாவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் (IND Vs UAE) அணிகள் இன்று (செப்டம்பர் 10) மோதின. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமான இப்போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய யுஏஇ அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 13.1 ஓவர்களில் 57 ரன்களுக்கு சுருண்டது.
இந்தியா அபார வெற்றி:
அதிகபட்சமாக அலிஷன் ஷரபு 22 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4, சிவம் துபே 3, ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனையடுத்து களமிறங்கிய இந்தியா 4.3 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 60 ரன்கள் அடித்தது. அபிஷேக் சர்மா 16 பந்தில் 30 ரன்கள் அடித்து அவுட்டானார். சுப்மன் கில் 9 பந்தில் 20* ரன்கள், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 7* ரன்கள் அடித்தனர். இதன்மூலம், இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி வீரர்கள்:
அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி.
ஐக்கிய அரபு அமீரகம் அணி வீரர்கள்:
முஹம்மது வசீம் (கேப்டன்), அலிஷன் ஷரபு, முஹம்மது ஜோஹைப், ராகுல் சோப்ரா, ஆசிப் கான், ஹர்ஷித் கவுஷிக், ஹைதர் அலி, துருவ் பராஷர், ரோஹித் கான், ஜுனைத் சித்திக், சிம்ரன்ஜீத் சிங்.