
ஜூன் 23, லீட்ஸ் (Sports News): இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இங்கிலாந்து - இந்தியா (ENG Vs IND 1st Test) அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, ஜூன் 20ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இத்தொடருக்கு, ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி (Anderson-Tendulkar Trophy) என பெயரிடப்பட்டுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அனைத்து போட்டிகளும், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. ENG Vs IND 1st Test, Day 4: கேஎல் ராகுல் அரைசதம்.. கேப்டன் கில் காலி.., இந்தியா 159 ரன்கள் முன்னிலை..!
இங்கிலாந்து எதிர் இந்தியா (England Vs India):
இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 113 ஓவர்கள் விளையாடி 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 147, ரிஷப் பந்த் 134, ஜெய்ஸ்வால் 101 ரன்கள் அடித்தனர். இங்கிலாந்து அணி சார்பில் ஜோஸ் டங் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா 4, கார்ஸ் மற்றும் பஷீர் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர். இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 100.4 ஓவர்கள் விளையாடி 465 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஒல்லி போப் 106, ஹரி புரூக் 99, டக்கெட் 62 ரன்கள் அடித்தனர். இந்தியா சார்பில் பும்ரா 5, பிரசித் கிருஷ்ணா 3, சிராஜ் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இந்தியா ஆல் அவுட்:
இதனையடுத்து, 6 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2வது இன்னிங்ஸை தொடங்கியது. ஆரம்பத்திலேயே ஜெய்ஸ்வால் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த சாய் சுதர்சன் 30 ரன்களில் நடையை கட்டினார். கேப்டன் சுப்மன் கில் 8 ரன்னில் கார்ஸ் பந்தில் கிளீன் போல்டானார். இதனையடுத்து, நிதானமாக விளையாடி வந்த கேஎல் ராகுல் 137 ரன்கள், அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் 118 ரன்கள் அடித்து அவுட்டாகினர். இறுதியில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். ஜடேஜா 25* ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். இந்தியா 96 ஓவர்களில் 364 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 6 ஓவர்களில் 21 ரன்கள் அடித்துள்ளது. தொடக்க வீரர்கள் ஜாக் க்ராலி 12, பென் டக்கெட் 9 ரன்களுடன் களத்தில் உள்ளனர். நாளை நடைபெறும் 5ஆம் நாளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 350 ரன்கள் தேவைப்படுகிறது.