ஆகஸ்ட்16, இஸ்லாமாபாத் (Cricket News): பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் (Pakistan Cricket Board), தனது குடும்பத்திற்கும், பயிற்சியாளர்களுக்கும், சக விளையாட்டு வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.
இவர் பாகிஸ்தானிற்காக 154 போட்டிகளில் விளையாடி மொத்தம் 237 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 38 வயதாகி இருக்கும் இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுகமாகி தனது 15 வருட கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
ரியாஸ் 2011,2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் அணிக்காக உலகக்கோப்பை (World Cup) தொடரில் விளையாடியிருக்கிறார். மேலும் இவர் ஏற்கனவே 2023 உலகக்கோப்பைக்காக விளையாடும் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் சற்றும் எதிர்பாராததாக இருக்கிறது.
ரியாஸ் ஏற்கனவே 2023 இல் ஓய்வு பெறுவது குறித்து தீர்மானித்து வைத்திருந்ததாகவும், தனது நாட்டிற்காகவும் கிரிக்கெட்டிற்காகவும் தன்னால் இயன்ற சேவையை இதுவரை அளித்துவிட்டதாக கூறி இருக்கிறார். தற்போது இருக்கிற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், மேலும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து (International cricket) விலகிய பிறகு முழு வீச்சுடன் பிரான்சைஸ் கிரிக்கெட்டில் ஈடுபட போவதாக பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது கூறியிருக்கிறார்.