Harbhajan Singh On MS Dhoni Rift (Photo Credit: @Six6s_ind X)

டிசம்பர் 06, மும்பை (Sports News): இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் (Harbhajan Singh), 2007 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் மிக முக்கிய பங்கு வகித்தவர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி (MS Dhoni) தலைமையில் விளையாடிய இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் அவரது தலைமையின்கீழ் கடந்த 2018 முதல் 2020ஆம் ஆண்டு வரை விளையாடினார். IND Vs AUS 2nd Test: அடிலெய்டு பகலிரவு டெஸ்ட் போட்டி; மிட்செல் ஸ்டார்க் அபார பந்துவீச்சு.. இந்தியா சொதப்பல் ஆட்டம்..!

இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நான் தோனியுடன் பேசுவதில்லை. நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோது பேசியுள்ளேன். மைதானத்தில் மட்டுமே, அதன்பின்னர் அவர் என் அறைக்கு வரமாட்டார். நானும் அவரது அறைக்குச் செல்லமாட்டேன். மற்றபடி நாங்கள் இருவரும் பேசமாட்டோம். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. எனக்கு எந்த காரணமும் இல்லை. ஒருவேளை தோனிக்கு இருக்கலாம். அவருக்கு எதிராக கூற என்னிடம் எதுவும் இல்லை. அவருக்கு என்னிடம் கூற எதாவது இருந்தால், தாராளமாக என்னிடம் கூறலாம்.

மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில், நான் அவரைத் தொடர்புகொள்ள முயற்சிக்கவில்லை. என் அழைப்பை யார் எடுப்பார்களோ அவர்களை மட்டுமே நான் தொடர்புகொள்வேன். அதுமட்டுமின்றி எனக்கு அதற்கான நேரமும் இல்லை. நான் உங்களுக்கு மரியாதை கொடுக்கின்றேன் என்றால், நீங்கள் அதே மரியாதையை எனக்கு மீண்டும் கொடுப்பீர்கள் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். கடைசியாக ஹர்பஜன் சிங்கும், தோனியும் கடந்த 2015ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினர். அதன்பிறகு ஹர்பஜன் சிங்கிற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின்னர் 2021ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.