ஜூலை 16, கொழும்பு (Sports News): வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஒருநாள் தொடரையும், 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றது. இதனையடுத்து, இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது டி20 போட்டியில், இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டியில், வங்கதேச அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. SL Vs BAN 3rd T20I: மஹேதி ஹசன் அபார பந்துவீச்சு.. வங்கதேசம் வெற்றி பெற 133 ரன்கள் இலக்கு..!
இலங்கை எதிர் வங்கதேசம் (Sri Lanka Vs Bangladesh):
இந்நிலையில், இலங்கை - வங்கதேசம் (SL Vs BAN) அணிகள் மோதும் 3வது டி20 போட்டி, இன்று (ஜூலை 16) நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு குசல் மெண்டிஸ் 6, குசல் பெரேரா 0, தினேஷ் சண்டிமால் 4, சரித் அசலங்கா 3 ரன் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். தொடக்க வீரர் பதும் நிசங்கா 46 ரன்கள் அடித்து அவுட்டானார். அடுத்து வந்த கமிந்து மெண்டிஸ் 21 ரன்னில் நடையை கட்டினார். இறுதியில், தசுன் சனகா 25 பந்தில் 35* ரன்கள் அடித்தார். இதன்மூலம், இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 132 ரன்கள் அடித்தது. வங்கதேச சார்பில் அதிகபட்சமாக மஹேதி ஹசன் 4 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
வங்கதேசம் அபார வெற்றி:
இதனையடுத்து, களமிறங்கிய வங்கதேச அணி 16.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 133 ரன்கள் அடித்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தன்சித் ஹசன் தமீம் 47 பந்துகளில் 73* ரன்கள் அடித்தார். இதன்மூலம், வங்கதேச அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.