
ஜூன் 26, திருநெல்வேலி (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நடப்பு தொடரின், முதல் சுற்று லீக் ஆட்டங்கள் கோவையிலும், 2வது சுற்று லீக் ஆட்டங்கள் சேலத்திலும் நடைபெற்று முடிந்தன. தற்போது, 3வது சுற்று லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியில் இந்தியன் சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் தொலைக்காட்சி (TNPL Live Watching) மற்றும் ஃபேன்கோடு (Fancode) என்ற இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் பார்க்கலாம். இந்நிலையில், இன்று (ஜூன் 26) நெல்லை ராயல் கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் (NRK Vs DD, Match 24) அணிகள் மோதின. NRK Vs DD: நெல்லை அதிரடி ஆட்டம்.. திண்டுக்கல் வெற்றி பெற 180 ரன்கள் இலக்கு..!
நெல்லை ராயல் கிங்ஸ் எதிர் திண்டுக்கல் டிராகன்ஸ் (Nellai Royal Kings Vs Dindigul Dragons):
அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை அணி, ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணியை எதிர்கொண்டது. நடப்பு தொடரில், நெல்லை அணி 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. திண்டுக்கல் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இப்போட்டியில், டாஸ் வென்ற நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய நெல்லை அணிக்கு கேப்டன் அருண் கார்த்திக் 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். முகமது அத்னான் கான் 22 ரன்னில் அஸ்வின் சுழலில் சிக்கினார். இறுதியில், சோனு யாதவ் 24 பந்தில் 39* ரன்கள், என்எஸ் ஹரிஸ் 20 பந்தில் 43* ரன்கள் என இருவரும் அதிரடியாக விளையாடினர். இதன்மூலம், நெல்லை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 179 ரன்கள் அடித்தது.
திண்டுக்கல் அணி வெற்றி:
இதனையடுத்து, களமிறங்கிய திண்டுக்கல் அணி 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தியது. ஆரம்பத்திலேயே கேப்டன் அஸ்வின் 5, ஷிவம் சிங் 2 ரன்னில் அவுட்டாகினர். அடுத்து வந்த பாபா இந்திரஜித் 15 ரன்னில் நடையை கட்டினார். சற்று அதிரடியாக விளையாடிய மான் பாஃப்னா 38 ரன்கள், விமல் குமார் 45 ரன்களில் அவுட்டாகினர். இறுதியில், சைனி (14 பந்துகள் 37 ரன்கள்) அதிரடி காட்ட திண்டுக்கல் அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 180 ரன்கள் அடித்தது. இதன்மூலம், திண்டுக்கல் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.