ZIM Vs SA 2nd Batting (Photo Credit: @ProteasMenCSA X)

ஜூலை 14, ஹராரே (Sports News): ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 அணிகள் மோதும் முத்தரப்புத் தொடர், ஜிம்பாப்வேயில் ஜூலை 14ஆம் தேதி முதல் ஜூலை 26 வரை நடைபெறுகிறது. இதில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும். லீக் சுற்றுப் போட்டிகளில் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிபோட்டிக்கு செல்லும். டி20 வடிவிலான இந்த முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில், இன்று (ஜூலை 14) ஜிம்பாப்வே - தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. ZIM Vs SA: சிக்கந்தர் ராசா அரைசதம் அடித்து அசத்தல்.. தென்னாப்பிரிக்க வெற்றிக்கு 142 ரன்கள் இலக்கு..!

ஜிம்பாப்வே எதிர் தென்னாப்பிரிக்கா (Zimbabwe Vs South Africa):

இப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் ரஸ்ஸி வான் டெர் டுசென் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு வெஸ்லி மாதேவெரே 1, கிளைவ் மடண்டே 8 ரன்கள் என விக்கெட்களை இழந்தனர். அடுத்து வந்த பிரையன் பென்னட் 30, ரியான் பர்ல் 29 ரன்கள் அடித்து அவுட்டாகினர். கேப்டன் சிக்கந்தர் ராசா அதிரடியாக விளையாடி அரைசதம் (54* ரன்கள்) கடந்து அசத்தினார். இதன்மூலம், ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 141 ரன்கள் அடித்துள்ளது. தென்னாப்பிரிக்க அணி சார்பில் அதிகபட்சமாக ஜார்ஜ் லிண்டே 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

தென்னாப்பிரிக்கா வெற்றி:

இதனையடுத்து, தென்னாப்பிரிக்க அணி 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி துரத்தியது. முதல் பந்திலேயே லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் டக் அவுட்டானார். தொடர்ந்து, ரீசா ஹென்ட்ரிக்ஸ் 11 ரன்னிலும், கேப்டன் வான் டெர் டுசென் 16 ரன்னிலும் அவுட்டாகினர். அதிரடியாக விளையாடிய டெவால்ட் ப்ரீவிஸ் 17 பந்தில் 41 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார். ரூபின் ஹெர்மன் 45 ரன்களில் அவுட்டானார். இறுதியில், தென்னாப்பிரிக்க அணி 15.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 142 ரன்கள் அடித்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே (பிளேயிங் லெவன்):

பிரையன் பென்னட், வெஸ்லி மாதேவெரே, கிளைவ் மடண்டே, சிக்கந்தர் ராசா (கேப்டன்), ரியான் பர்ல், தஷிங்கா முசெகிவா, டோனி முனியோங்கா, வெலிங்டன் மசகட்சா, ரிச்சர்ட் நகரவா, பிளஸ்ஸிங் முசரபானி, ட்ரெவர் குவாண்டு.

தென்னாப்பிரிக்கா (பிளேயிங் லெவன்):

ரீசா ஹென்ட்ரிக்ஸ், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென் (கேப்டன்), டெவால்ட் ப்ரீவிஸ், ரூபின் ஹெர்மன், ஜார்ஜ் லிண்டே, கார்பின் போஷ், அண்டில் சிமெலேன், நகாபயோம்சி பீட்டர், நந்த்ரே பர்கர், லுங்கி என்கிடி.