ஜூலை 30, புலவாயோ (Sports News): நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடர் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமாகும். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 30) புலவாயோவில் தொடங்கியது. நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், கிளென் பிளிப்ஸ் ஆகியோருக்கு பதிலாக மேத்யூ ஃபிஷர் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். ZIM Vs NZ 1st Test, Day 1: 67 ரன்னுக்கு 4 விக்கெட்கள் இழப்பு.. தடுமாறும் ஜிம்பாப்வே..!
ஜிம்பாப்வே எதிர் நியூசிலாந்து (Zimbabwe Vs New Zealand):
இந்நிலையில், கிரேக் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வே அணி, மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் கிரேக் எர்வின் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க வீரர்கள் பிரையன் பென்னட் 6, பென் குர்ரான் 13 ரன்னில் மேட் ஹென்றி பந்தில் அவுட்டாகினர். அடுத்து வந்த சீனியர் வீரர் சீன் வில்லியம்ஸ் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். நிதானமாக விளையாடி வந்த நிக் வெல்ச் 27 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
நியூசிலாந்து அபாரம்:
அடுத்து வந்த சிக்கந்தர் ராசா 2 ரன்னில் நடையை கட்டினார். பொறுமையாக விளையாடி வந்த கேப்டன் கிரேக் எர்வின் 39 ரன்னிலும், தஃபட்ஸ்வா சிகா 30 ரன்னிலும் நாதன் ஸ்மித் பந்தில் எல்பிடபிள்யூ அவுட்டாகினர். முதல் நாள் தேநீர் இடைவேளை வரை ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்களை இழந்து 138 ரன்கள் அடித்துள்ளது. நியூமன் நியாம்ஹுரி 6, வின்சென்ட் மசெகேசா 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.
ஜிம்பாப்வே (பிளேயிங் லெவன்):
பிரையன் பென்னட், பென் குர்ரான், நிக் வெல்ச், சீன் வில்லியம்ஸ், கிரேக் எர்வின் (கேப்டன்), சிக்கந்தர் ராசா, தஃபட்ஸ்வா சிகா, நியூமன் நியாம்ஹுரி, வின்சென்ட் மசெகேசா, பிளெஸ்ஸிங் முசரபானி, தனகா சிவாங்கா.
நியூசிலாந்து (பிளேயிங் லெவன்):
டெவோன் கான்வே, வில் யங், ஹென்றி நிக்கோல்ஸ், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளூன்டெல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), நாதன் ஸ்மித், மாட் ஹென்றி, வில்லியம் ஓரூர்கே.