Five Students Drowned In Sea (Photo Credit: @backiya28 X)

மே 06, கன்னியாகுமரி (Kanyakumari News): தென் தமிழகம், கேரளாவில் கள்ளக்கடல் எனும் நிகழ்வு நடப்பதால் பொதுமக்களும் மீனவர்களும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர். இந்த நிகழ்வு நேற்று முன் தினம் அதிகாலை 2 மணி முதல் தொடங்கியதாகவும் நேற்று இரவு 11.30 மணி வரை நீடிக்கும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை வரை தமிழகத்தில் கடல் பகுதி கொந்தளிப்பாகவே காணப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதையும் மீறி பலர் கடலுக்கு சென்று குளித்து வருகின்றனர்.

கடல் அலையில் சிக்கி 3 மாணவிகள் பலி: இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆயிரம்கால் பொழிமுகம் லெமூரியா கடற்கரைக்கு, திருச்சியில் இருந்து இன்று(மே 6) சுற்றுலா வந்த மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 13 மாணவ மாணவியர்களில் 6 பேர் கடல் அலையில் சிக்கினர். இதில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அப்பகுதி மீனவர்கள் உதவியுடன் மற்ற 5 பேரை தேடி வந்த நிலையில், 3 மாணவிகள் மற்றும் இரு மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அலையில் சிக்கிய சிறுமி சடலமாக மீட்பு: மேலும் குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் கடற்கரையில் நேற்று ஏற்பட்ட கடல் சீற்றத்தில் கம்பிளார் பகுதியை சேர்ந்த தந்தையும், மகளும் அலையில் அடித்து செல்லப்பட்டனர். தந்தை மீட்கப்பட்ட நிலையில் மகள் ஆதிஷா(7) மாயமானார். அவரை தேடும் பணி இரவு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று அந்த சிறுமியை சடலமாக மீட்டனர். இச்சம்பவம் கம்பிளார் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.