Arrest (Photo Credit: Pixabay)

ஜூன் 14, குன்னூர் (Nilgiris News): நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அடுத்த அருவங்காடு பகுதியை சேர்ந்தவர் கவின்குமார் (வயது 24). இவர், கார் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். கவின்குமார், எடப்பள்ளி பகுதியை சேர்ந்த ரோஷினி (வயது 24) ஆகிய இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவந்த நிலையில், பெண்ணின் பெற்றோர் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால், காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி வெலிங்டன் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். பின்னர், கோவிலில் வைத்து காதல் திருமணம் (Love Marriage) செய்து கொண்டனர். இதனிடையே, மகளை காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஏப்ரல் 26-ஆம் தேதி கவின்குமார் மற்றும் ரோஷினி ஆகியோரை அழைத்து வெலிங்டன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ரோஷினி தனது காதல் கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து, அவருடன் அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இவர்கள் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்பில் வசித்து வந்தனர். Health Effects Of Drinking Water: மாநகராட்சி வழங்கிய குடிநீரை குடித்தவர்களுக்கு உடல்நல பாதிப்பு; 15-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி..!

இந்நிலையில், கடந்த 11-ஆம் தேதி அன்று இரவு பெண்ணின் உறவினர்கள் சிலர் கவின்குமார் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் கவின்குமார், அவருடைய தாயார் மற்றும் சகோதரி ஆகியோரை ஆபாச வார்த்தைகளால் பேசி, தாக்கி விட்டு வலுக்கட்டாயமாக ரோஷினியை அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து, கவின்குமார் அளித்த புகாரின் பேரில் அருவங்காடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கவின்குமாரின் மனைவி ரோஷினியை தேடி வந்தனர். மேலும், ரோஷினியின் பெற்றோர் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனிடையே, ரோஷினியின் தந்தை கோபாலகிருஷ்ணன், அவரை ஓசூருக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர், உடனடியாக ஓசூர் சென்று அங்குள்ள ஒரு வீட்டில் இருந்த ரோஷினியை மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ரோஷினியை கடத்தி சென்ற வழக்கில் அவருடைய தாய் சாந்தி, தந்தை கோபாலகிருஷ்ணன் உட்பட 6 பேரை கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவான ஒருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.