ஆகஸ்ட் 27, கோயம்புத்தூர் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டம், சாமிசெட்டிபாளையம் அருகே உள்ள சின்னக் கண்ணன் புதூரைச் சேர்ந்த தம்பதி ஆதி கணேஷ்-நந்தினி (வயது 22). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், மீண்டும் கர்ப்பமான நந்தினிக்கு கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை (Girl Child) பிறந்தது.
இதனையடுத்து, நந்தினி தனக்கு இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தையை இடைத்தரகர் மூலம், வேறு ஒரு பெண்ணுக்கு ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக, கோவை மாவட்ட சைல்டு - ஹெல்ப் லைனுக்கு (Child Helpline) கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின்பேரில், அதன் ஒருங்கிணைப்பாளர் அஞ்சலா ஜோஸ்பின் தலைமையிலான குழுவினர் மற்றும் காவல்துறையினர் நந்தினியிடம் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். Blade Cut To Female Police: கோவில் திருவிழாவில் பெண் காவலருக்கு பிளேடால் வெட்டு.. 6 பேர் கைது..!
அதில், நந்தினி தனக்கு பிறந்த 14 நாட்களே ஆன பெண் குழந்தையை, கஸ்தூரி பாளையம் சத்யா நகரைச் சேர்ந்த தேவிகா (வயது 42) என்ற இடைத்தரகர் மூலம் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தம்பதி மகேஸ்வரன்-அனிதா (வயது 40) என்பவருக்கு ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. மகேஸ்வரன்-அனிதா தம்பதிக்கு குழந்தை இல்லாததால், அவர்கள் இடைத்தரகர் மூலம் பணம் கொடுத்து, நந்தினியின் குழந்தையை வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து சைல்டு-ஹெல்ப் லைன் ஒருங்கிணைப்பாளர் அஞ்சலா ஜோஸ்பின், பெரியநாயக்கன்பாளையம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், காவல்துறையினர் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தாய் நந்தினி, தேவிகா, அனிதா ஆகிய மூவரையும் இன்று (ஆகஸ்ட் 27) காலை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.