
ஜூலை 04, ஊட்டி (Nilgiris News): நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அருகேயுள்ள ஹோப் பார்க் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 50). இவர், பல்வேறு அரசு பள்ளிகளில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஊட்டி அருகேயுள்ள அரசு பள்ளியில் பணியாற்ற தொடங்கினார். ஓடும் காரில் சிறுமி பாலியல் வன்கொடுமை.. கான்ஸ்டபிள் கைது..!
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை:
இந்நிலையில், அவர் பணிபுரியும் அரசு பள்ளிக்கு பாலியல் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காவல் அதிகாரிகள் சென்றனர். அப்போது, பாலியல் கல்வி குறித்து மாணவ - மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்வு முடிந்ததும் பள்ளியில் படிக்கும் 6ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார், தன் உடலில் தகாத இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை (Sexual Abuse) கொடுத்ததாக கூறியுள்ளார்.
ஆசிரியர் கைது:
இதனைத்தொடர்ந்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில், பள்ளியில் படித்த 21 மாணவிகளுக்கு ஆசிரியர் செந்தில்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும், குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதன்பின்னர், ஊட்டி ஊரக காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, ஆசிரியர் செந்தில்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை நேற்றிரவு கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3